மஹேல ஜயவர்தன மீதான இறுதித்தீர்மானம் நிறைவேற்றப்படும் – இலங்கை கிரிக்கட் சபை

மஹேல ஜயவர்தன தம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறியுள்ளார் எனவும், அவர் மீதான இறுதித்தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அவுஸ்த்ரேலிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன,  அங்கிருந்து நேற்றுமுன்தினம் இலங்கை கிரிக்கட் சபை மீது தாம் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம் என தெரிவித்த கருத்தே பூதாகரமானதாக மாறியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உலகக் கிண்ண T20 போட்டிகளுக்கான ஊக்குவிப்புத் தொகையினை இதுவரை காலமும் வழங்காது இழுத்தடிப்பு செய்து வரும் இலங்கை கிரிக்கட் சபையிடம்,  தமக்கான ஊக்குவிப்புத் தொகையினை வழங்க உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்மென முன்வைத்திருந்த ரகசிய வேண்டுகோள் ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டதன்மூலம் தாம் அவமானப் படுத்தப் பட்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கட்டின் இந்த செயல் மூலம் இலங்கை கிரிக்கட் மீது தாம் வைத்திருந்த நம்பிக்கையினை இழந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

உலகக் கிண்ண T20 போட்டிகளில் இலங்கை அணி பங்குகொண்டமைக்காக, சர்வதேச கிரிக்கட் சபை இலங்கை கிரிக்கட் சபைக்கு வழங்கிய ஊக்குவிப்புத்  தொகையில் 25 வீதம்,  அணியின் வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளருக்கும் வழங்கப்படவேண்டியது கட்டாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post