(TM) இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் தென்னாபிரிக்க அணியை இலங்கை அணி 88 ஓட்டங்களால் தோற்கடித்தது.
கட்டாக்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைக் குவித்தது.
முதலாவது விக்கெட்டை 10 ஓட்டங்களுக்கும், இரண்டாவது விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கும் இழந்து தடுமாறிய இலங்கை அணி, அதன் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளின் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் மிகச்சிறப்பான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக சாமரி அத்தப்பத்து 106 பந்துகளில் 52 ஓட்டங்களையும், அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன 65 பந்துகளில் 44 ஓட்டங்களையும், இஷானி கௌஷல்யா 31 பந்துகளில் 43 ஓட்டங்களையும், தீபிகா ரசங்கிக்கா 53 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக மார்சியா லெற்செலோ, கோல் ட்ரையோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஷப்நிம் இஸ்மாயில், சுனத்தே லௌப்செர், டேன் வான் நியக்கேர்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 40.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி, தொடர்ச்சியாகத் தடுமாறியிருந்ததோடு, இறுதி 5 விக்கெட்டுக்களையும் 17 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக ஷன்ட்ரே பிறிட்ஸ் 74 பந்துகளில் 54 ஓட்டங்களையும், டேன் வான் நியக்கேர்க் 41 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவி ஷஷிகலா சிரிவர்தன 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சாமனி செனவிரத்ன, ஶ்ரீபாலி வீரக்கொடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், இஷானி கௌஷல்யா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
