புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் கூட்டம் வாடிகனில் நேற்று தொடங்கியது. வாக்கெடுப்பில் பங்கேற்கும் கார்டினல்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ரகசிய உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பின்னர் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் புதிய போப் ஆண்டவர் தேர்வாகவில்லை என்பதன் அடையாளமாக வாடிகன் தேவாலய புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியானது. 2ம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் 265வது போப்பாக இருந்தவர் 16ம் பெனடிக்ட். வயது 85. இவர் தனது மூப்பின் காரணமாக போப் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த ஜனவரி 11ம் தேதி திடீரென அறிவித்து, கடந்த 28ம் தேதி ஓய்வு பெற்றார். பொதுவாக போப் ஆண்டவர் இறந்த பிறகுதான் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த வழக்கம்தான் கடந்த 600 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டது. ஆனால், போப் 16ம் பெனடிக்ட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள கார்டினல்கள் வாக்குப்போட்டு அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான கான்கிளேவ் எனப்படும் கூட்டம் நேற்று தொடங்கியது. முன்னதாக செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்குபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அதன்பின், போப் ஆண்டவர் தேர்வுக்கான பணிகள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் தொடங்கியது. புதிய போப் தேர்வில் 80 வயதுக்கு உட்பட்ட கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பதால் இதில் 115 கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப் பதிவு மிகவும் ரகசியமாக நடைபெறும். சிஸ்டைன் தேவாலயத்துக்குள் கார்டினல்கள் சென்ற பின், வேறு யாரும் உள்ளே செல்லவோ, வெளியில் வரவோ அனுமதி கிடையாது.
வெளி உலக தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்படும். மிக மிக ரகசியமாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும். போப்பை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு 3 நாட்கள் அல்லது அதற்கு மேலும்கூட நடைபெறும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை நடக்கும். ஒவ்வொரு கார்டினலுக்கும் வாக்குச் சீட்டு வழங்கப்படும். அதில், போப் பதவிக்கு தான் விரும்பும் கார்டினலின் பெயரை எழுதி வாக்குப் பெட்டியில் போடுவார்கள். தன்னுடைய பெயரையே போப் பதவிக்கு எழுதி வாக்குப் போட அனுமதி கிடையாது. மூன்றில் 2 பங்கு யாருக்கு கிடைக்கிறதோ அவரே புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார். யாருக்கும் பெரும்பான்மை ஓட்டு கிடைக்காவிட்டால், மீண்டும் வாக்குப் பதிவு நடக்கும். வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் சிஸ்டைன் தேவாலயத்தில் வாக்குச் சீட்டுகளை எரிப்பார்கள். தேவாலய புகைபோக்கி வழியாக புகை வெளியேறும்.
வெள்ளை புகை வந்தால் போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக அர்த்தம். போப் தேர்வு தாமதமானால், கரும்புகை வெளியில் வரும். அதை பார்த்துதான் வெளியில் உள்ள மக்கள் தெரிந்து கொள்வார்கள். நேற்று வாக்கெடுப்பு என்பதால், வெள்ளை புகையை எதிர்பார்த்து வெளியே ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனால், வாக்குடுப்புக்குப் பிறகு, கரும்புகை வெளியேறியது. முதல்கட்ட வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வாகவில்லை என்பது இதன் மூலம் தெரியவந்தது.
2ம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இன்றாவது வெள்ளை புகை வருமா என்று எதிர்பார்த்து ஏராளமானோர் சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே காத்திருக்கின்றனர். மிலன் ஆர்ச் பிஷப்பாக உள்ள இத்தாலியை சேர்ந்த ஆங்கிலோ ஸ்கோலோ, கனடாவை சேர்ந்த மார்க் ஓலெட், அமெரிக்காவின் ஓமாலே உள்ளிட்டவர்களுக்கு புதிய போப் தேர்வில் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதிய போப் தேர்வு குறித்து உடனுக்குடன் தெரிவிக்க உலகம் முழுவதும் இருந்து சுமார் 5,600 நிருபர்கள் வாடிகனில் குவிந்துள்ளனர்.
Tags
உலகச் செய்திகள்
