பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் கணினிகளை வழங்குவதற்கான விசேட வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார். மேற்படி செயற் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சு மற்றும் தனியார் கையடக்க தொலைபேசி நிறுவனம் ஒன்றுடன் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை கணினி மூலம் மேற்கொள்வதற்கு வசதியாக இந்த திட்டம் மேற்கொள்ளபடவுள்ளது. சந்தையில் நிலவுகின்ற விலையை விட 25 வீத விலைக் கழிவுடன் இலங்கை வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தில் இந்த கணினிகளை கொள்வனவு செய்ய முடியும்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களும், கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களும் தமது பாடங்களை கணனியூடாக பயில்வதற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. இதன் பிரகாரம் மிகவும் குறைந்த விலைக்கு தொலைத் தொடர்பு வசதிகளை இந்த நிறுவனத்திடம் இருந்து கணனிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வாறாயினும் மாணவர்கள் தமது பாட விதானத்திற்கு அமைவான தகவல்களை பெற்றுக் கொள்வதை தவிர பாட விதானங்களுக்கு அப்பாற்பட்ட இணையத்தளங்களை தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிபர்களுக்கும் கணனிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- AdaDearana