ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் குடியேறுவதைத் தடுத்து நிறுத்தவும், மக்களுக்கு இதன் மூலம் உறுதியான செய்தி விடுக்கவும்தான் நான் தாக்குதல் நடத்தினேன்' என்று நார்வே இரட்டை தாக்குதல் குற்றவாளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக், கோர்ட்டில் திங்கட்கிழமை கூறினார். இதையடுத்து, அவரை எட்டு வாரங்கள் தனிமைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.நார்வேயில் சமீபத்தில் நடந்த பிரதமர் அலுவலக குண்டு வெடிப்பு மற்றும் உடோயா தீவு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், உலகையே குலுக்கின. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் திங்கட்கிழமை அந்நாட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆஜராவதற்கு முன், அவர் தன் வழக்கறிஞர் மூலம் நீதிபதிக்கு சில வேண்டுகோள்கள் விடுத்திருந்தார். அதன்படி, போலீஸ் உடையில், மக்கள் முன்னிலையில் தோன்றி, தான் குண்டு வெடிப்பு நடத்தியது எதற்காக என்று விளக்கப் போவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கும்படியும் கோரியிருந்தார்.
மேலும், யூரோப்பை காப்பாற்றும் இந்தப் பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தும் பிரசார முயற்சியாக இதைப் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால், இச்சம்பவங்களில் தான் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டால், அங்கு என்ன சொல்ல வேண்டும் என்பதையும் அவர் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளார்.
ப்ரீவிக்கின் கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதி, முதல் விசாரணை, கோர்ட்டில் மூடிய அறைக்குள் நடக்க வேண்டும்; பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதன்படி, திங்கட்கிழமை சுவிஸ் நேரப்படி நண்பகல் 12 மணியளவில் ப்ரீவிக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை 35 நிமிடங்கள் நடந்தது.
விசாரணையில் ப்ரீவிக் கூறுகையில், "குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு இரண்டையும் நான் தான் நடத்தினேன். ஆனால், அது குற்றச் செயல் அல்ல; சட்டப்படி இது குற்றமும் அல்ல. இஸ்லாமியர்கள் யூரோப்பாவில் தொடர்ந்து குடியேறி வருகின்றனர். அதனால், அவர்களிடம் இருந்து யூரோப்பாவைக் காப்பாற்றத் தான் நான் இப்படி செய்தேன். இதன் மூலம் மக்களுக்கு உறுதியான செய்தி அளிக்க முடிவெடுத்தேன்' என்றார்.
விசாரணை முடிவில், அவருக்கு எட்டு வார தனிமை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 21 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.
இந்நிலையில் உடோயா தீவில், தண்ணீரில் மூழ்கி இறந்தோரை தேடும் பணி தொடர்கிறது. நார்வே இளவரசரின் உறவினரான ஓர் இளைஞரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார். இதையடுத்து, இரு சம்பவங்களிலும் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. ப்ரீவிக் வெளியிட்டுள்ள 1,500 இணையப் பக்கங்களில், இந்தத் தாக்குதல் குறித்து எவ்வாறு திட்டமிட்டது, ஆயுதங்கள் வாங்கியது, ஆயுதங்களின் வகைகள் ஆகியவை குறித்து விரிவாகவே விளக்கியுள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில், கொரானல் என்ற இடத்தில் உள்ள ப்ரீவிக்கின் தந்தை வீட்டில், நேற்று பிரான்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், ப்ரீவிக்கின் தந்தை ஜென்ஸ் ப்ரீவிக் பல ஆண்டுகளாக தன் மகனுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளார் என பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
நன்றி: நேச்ம்நெட்
Tags
உலகச் செய்திகள்

