ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு தென்மேற்கு பகுதியில் வார்டக் மாகணத்தில் உள்ள சயீத் அபட் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அமெரிக்காவின் சினூக் ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் 30 அமெரிக்க ராணுவத்தினர், 7 வீரர்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டனர். தலிபான்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் இவ்வளவு அதிக நேட்டோ படையினர் பலியானது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஆப்கன் அரசு அதிகாரி கூறியது: தலிபான்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாக தகவல் வந்ததது. இதையடுத்து அந்த இடத்தை நோக்கி ஹெலிகாப்டரில் அமெரிக்க கூட்டுப்படையினர் பறந்து கொண்டிருந்த போது அதை நான்கு பாகிஸ்தானியர்கள் உள்பட தலிபான் பயங்கரவாதிகள் ஏவுகணைகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் வீழ்த்தினர்.
தலிபான்களின் தளபதி காரி தஹீர் என்பவர்தான் வேண்டுமென்றே பொய்யான தகவலை கூறியுள்ளார். ஹெலிகாப்டர் எந்த வழியாக வரும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர்.
அவர்கள் பதுங்கி காத்திருந்த இடத்துக்கு மேலே ஹெலிகாப்படர் வந்தவுடன் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றார் அவர்.
அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இதை தலிபான்கள் செய்துள்ளதாக ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாய் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை இத்தாக்குதலில் தங்களுக்கு தொடர்புள்ளதாக தலிபான்கள் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
உலகச் செய்திகள்