இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வந்த தப்லீக் ஜமாஅத் இயக்கத்தை சேர்ந்த 161 வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விஸா விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படடுள்ளது.
வெவ்வேறு குழுக்களாக வந்த இக்குழுவினர் விஸா விதிகளை மீறியுள்ளனர் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்தா பெரேரா தெரிவித்தார். இவர்களுக்கு சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவதற்கு விஸா வழங்கப்பட்டதாகவும் விஸிட் விஸாவானது சுற்றுலா நோக்கங்களுக்காக மாத்திரமே வழங்கப்படுகிறது. வேறெதெற்கும் அல்ல எனவும் சூலானந்தா பெரேரா தெரிவித்தார். இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் சில அரபுநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான கருத்துத் தெரிவிக்கையில், இக்குழுவினர் இலங்கையில் இருப்பது தமக்குத் தெரியும் எனவும் இவர்கள் அரசியல் நோக்கம் அற்ற தீங்கற்றவர்கள் எனவும் கூறினார்.
இக் குழுவினர் தமது சொந்தப் பணத்தையே அவர்களின் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாகவு தப்லீக் ஜாமா அத் அதிகாரிகள் தெரிவித்தனர். விஸா ரத்துச்செய்யப்பட்டமைக்கு காரணம் இதுவரை தெரியவில்லை
