தம்புள்ளை ஒரு புனித பூமி என்பதன் காரணமாக அங்கு இருக்கும் பள்ளிவாசலை அகற்றும் படி கூறி நேற்று பிக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பள்ளிவாயல் உள்பகுதி சிறு சேதத்திற்கு உள்ளானது.
இன்று காலை பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த கௌரவ அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பௌஷி ஆகியோர் பள்ளிவாயல் நிர்வாக சபையுடன் நடந்த விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாயலை உடன் திறப்பதற்கு ஏற்பாடும் செய்தனர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் பிரதேச செயலாளரை கடுமையாக கடிந்து கொண்டதுடன், பள்ளிவாயல் வக்பு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் முன்வைத்தனர்.
இதில் உரையாற்றிய வசந்த குமார நவரட்ண என்பவர் தான் 47 வருடங்களாக தம்புள்ளையில் வசிப்பதாகவும் இப்பள்ளிவாயல் அங்கிருப்பதை தனது சிறுவயது முதல் அறிந்திருந்ததாகவும் கூறினார்.
தம்புள்ளை மக்கள் இப்பள்ளிவாசலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 5 சதவீதமானோர் மாத்திரமே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களே. உள்ளூர் அரசியல்வாதிகள் இருவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தனர். புனித பிரதேசம் என்ற பெயரில் இங்குள்ள மக்களை வெளியேற்றுதற்கு திட்டமிடப்படுகிறது. அதற்காக பள்ளிவாயலை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து லுஹர் தொழுகையுடன் பள்ளிவாயல் மீண்டும் திறக்கப்பட்டது. இத்தொழுகையில் அமைச்சர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.


