தெஹிவளை பிரதேசத்தில் கல்விஹார பிளேஸில் அமைந்துள்ள "தாருர் ரஹ்மான்" பள்ளிவாயல், சிறுவர் குர்ஆன் மத்ரஸாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று மாலை அதே பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டம் மிருகக்காட்சிசாலை – கல்விஹார பிளேஸ் சந்தியில் நடைபெற்றது.
ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் சிறுவர் குர்ஆன் மத்ரஸா, "பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரஸா " என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புணரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 4:00 மணியளவில் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் மத்ரஸாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. அதில் கலந்து கொண்டோர் மத்ரஸாவை அங்கிருந்து அகற்றுமாறு கோஷமிட்டதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர். அவ்விடத்தில் போலீசார் அதிகளவில் வருகை தந்திருந்ததுடன், மத்ரஸா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர்.
குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோஷமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து பள்ளிவாயலுக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் ஐ. தே. க. உறுப்பினர் ஜனாபா மரீனா ஆப்தீன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பான கூட்டம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையில் இடம்பெறும் என அறிய முடிகிறது
படங்கள் : Knowledge Box








