மட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில் அசம்பாவிதம்; படம் இணைப்பு


மட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு வீடுகளும் ஒரு வியாபார நிலையமும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன.

பள்ளிவாயில் கட்டிடம் எரிந்துள்ளதொடு, அங்கிருந்த பெறுமதியான பல பொருட்களும் சேதப்படுத்தப் பட்டுள்ளன. அத்தோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நான்கு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு வியாபார ஸ்தாபனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களின் பெயர் விபரங்களை போலீசார் சேகரித்திருப்பதாகவும், அதில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.







இன்று (12.08.2012) அதிகாலை இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை குறித்த கிராமத்தைச் சேர்ந்த நாகூர்பிச்சை சப்பிநோநா (வயது சுமார் 48) என்ற முஸ்லிம் பெண்மணியே ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கோடாரியினால் வெட்டப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பெண் நேற்று மாலை தனது காணியில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் பின்னால் வந்த இனந்தெரியாத நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளதுடன், கோடாரியினாலும் வெட்டியுள்ளனர்.

குறித்த பெண் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும், உடம்பில் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் காணப்படுவதாகவும் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள அயலவர்கள் தெரிவித்துள்ளனர். அப் பெண்ணின் கணவன் வயதானவரெனவும், பார்வை குறைபாடு உள்ளவரெனவும், இப்பெண் பெரிய ஆட்டு மந்தை, ஏக்கர் கணக்கான காணிகளுக்கு சொந்தமானவரெனவும், இதனாலேயே இதைப் பொறுக்க இயலாதோர் இவ்வாறானதோர் ஈனச் செயலை செய்திருக்க முடியும் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் மட்டக்களப்பு உன்னிச்சைப் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வன்செயலின் காரணமாக புதிய காத்தான்குடி அப்றார் நகரில் வசித்து, பின்னர் மீண்டும் உன்னிச்சைப் பிரதேசத்திற்கு மீளக்குடியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாக்கப்பட்ட பெண் -  நாகூர்பிச்சை சப்பிநோநா 

Post a Comment

Previous Post Next Post