எதிர்வரும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை நாளை சனிக்கிழமை (ஓகஸ்ட் 18ஆம் திகதி) மஃரிப் தொழுகை அடுத்து பார்க்கும் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எம்.ஏ.அஸீஸ் (மிஸ்பாஹி) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டப் பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் பிறை மாதங்களை கணித்துக் கூறும் பாரிய பொறுப்பை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை மிகத் திறம்பட செய்து வருகின்றன.
இலங்கையில் முஸ்லிம்கள் இவ்வழிகாட்டலிலேயே ஹிஜ்ரி வருடத்தினை பின்பற்றி வருகின்றனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2009 செப்டம்பர் 6ஆம் திகதி பிறை பார்ப்பது பற்றிய 5 தீர்மானங்களை நிறைவேற்றியது.
அதற்கமைவாக மாதாந்தம் பிறை மாதத்தைத் தீர்மானித்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவித்து வருகிறது. குறித்த தீர்மானங்கள் பின்வருமாறு:
1. உள்நாட்டில் வெற்றுக்கண்களுக்கு பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பெறப்படும்.
2. தலைப் பிறையை பூமியிலிருந்து வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டும்.
3. வானியல் துறையில் புலமை பெற்ற முஸ்லிம் அறிஞர் குழுவொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவுக்குத் துணையாக செயற்படும்.
4. ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து, வானியல் அவதானத்தின் அடிப்படையிலான நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காண முடியாத நாளாகக் கொள்ளப்படும்.
5. பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாக கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயற்படல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ, பெருநாள் கொண்டாடுவதற்கோ பிறரை தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.
இத்தீர்மானங்களின் அடிப்படையில் சென்ற ஜூலை மாதம் 21ம் திகதி சனிக்கிழமை ரமழான் மாதம் ஆரம்பமானது. அவ்வகையில், எதிர்வரும் ஷவ்வால் மாதத்திற்கான பிறையை நாளை சனிக்கிழமை (ஓகஸ்ட் 18ஆம் திகதி) மஃரிப் தொழுகை அடுத்து பார்க்கும் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது. சமூக ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு, இஸ்லாத்தின் கண்ணியத்தை காத்து, ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறது”.
இதேவேளை, ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை வெற்று கண்களுக்கு தென்படும் பட்சத்தில் 011 – 5234044, 011 – 2432110, 011 – 2390783 மற்றும் 0777 – 366099 என்ற தொழுபேசி இலக்கங்கள் ஊடாக கொழும்பு பெரிய பள்ளிவாசலிலுள்ள மத்ரஸதுல் ஹமீதியா மண்டபத்தில் நடைபெறும் பிறை தீர்மானிக்கும் மாநாட்டிற்கு அறிவிக்கும் படி கோரப்பட்டுள்ளது.
