கோஹிலவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் ஜும்ஆ தொழுகை


கொழும்பு வெல்லம்பிட்டி கோஹிலவத்தையில் 63-17 இல் மஸ்ஜிதில் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது. அதேவேளை முஅத்தின் மீது தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி ,மஸ்ஜிதுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக குறித்த மஸ்ஜிதின் பொருளாளர் ஸாகபார் ஹாஜியார் தெரிவித்த தகவலில் நேற்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கான அதான் சொல்லப்படும் போது மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் அத்தின் மீது தாக்குதல் நடத்தி அவரைக் காயப்படுத்தினர். இது தொடர்பாக நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு பின்னால் வேறு பலமான சக்திகள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இந்த விடயத்தை கையாள்வதில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் ஆலோசனை பெற்றே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்று மாலை பொலிஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளது என்று தெரிவித்தார் .

இந்த மஸ்ஜிதுக்கு தொழுகைக்காக வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதேவேளை தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் வேறு சில சிங்கள வாலிபர்களின் முச்சக்கர வண்டிகளையும் தாக்கி சேதப் படுத்தியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் மஸ்ஜிதைத் தாக்க வருமாறு முச்சக்கர வண்டி சாரதிகளை அழைத்தபோது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த போதே குறித்த சந்தேக நபர்கள் மேற்படி முச்சக்கர வண்டிகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக குறித்த சிங்கள வாலிபர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கோஹிலவத்தை மஸ்ஜிதின் பொருளாளர் ஸாகபார் ஹாஜியார் எமக்குத் தெரிவித்தார் .

தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்வார்களா அல்லது சம்பந்தப்பட்ட தரப்புடன் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் இவர்கள் விடுதலை செய்யப் படுவார்களா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

நன்றி  - www.virakesari.lk

Post a Comment

Previous Post Next Post