வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள், அதாவது பாதி இந்தியா கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்துப் போயுள்ளனர். ஒட்டுமொத்த பொருளாதாரமும் இப்பகுதியில் ஸ்தம்பித்துப் போய் விட்டது.
ரயில் போக்குவரத்து பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. 60 கோடி மக்கள் என்னநடக்கிறது என்றே தெரியாமல் தவித்துப் போய் விட்டனர். உலகின் மிக மோசமான மின் தடை என்ற பெயரை இந்த வடக்கு, கிழக்கு மின்சாரம் செயலிழந்த சம்பவம் பெற்று விட்டது.
டெல்லி மெட்ரோ ரயில் சேவை பல மணி நேரம் பாதிப்பைச் சந்தித்தது. பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். மேற்கு வங்கத்தில் அசன்சோல் நிலக்கரி சுரங்கத்திற்குள் 200 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மிகவும் கஷ்டப்பட்டு மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதேபோல ஜார்க்கண்ட்டிலும் 65 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் மின்தொகுப்பு முடங்கியதும் மெட்ரோ ரயில், மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர். ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.
மின்தடையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்:
வடக்கு மண்டலம்: பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சண்டிகர்.
கிழக்கு மண்டலம்: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சிக்கிம். வடகிழக்கு மண்டலம்: அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா,மணிப்பூர், மிசோரம், திரிபுரா.
Tags
உலகச் செய்திகள்




