இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலாம் அவர்களை மோசமாக சித்தரித்து காட்டும் படம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டமையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கண்டித்துள்ளது.
முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலாம் அவர்களை மோசமாக சித்தரித்து காட்டும் படம் தயாரிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந் நாட்களில் முஸ்லிம் உலகெங்கும் பரவலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளன. தங்கள் உயிரிலும் மேலாகமதிக்கும் இறுதி நபி முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத்) தொடர்புபடுத்தி மற்றுமொரு மட்டரகமானதும் அநாகரிகமானதுமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதே முஸ்லிம்கள் இவ்வாறு ஆத்திரம் கொள்வதற்குக் காரணமாகும். காலத்துக்குக் காலம் இத்தகைய இழி செயல்களில் ஈடுபடும் கயவர்கள் இருக்கவே செய்வர். அவர்களுடைய அம் முயற்சி இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக வழியமைத்ததேயன்றி அதன் வீழ்ச்சிக்கு ஒரு போதும் துணை நிற்கவேயில்லை என்பது வரலாறு கூறும் சான்றாகும். இஸ்லாத்தைக் குறை கூறியோர், அல் குர்ஆனை கேலி செய்தோர், உத்தம நபியை இழிவுபடுத்தியோர் வரலாறு நெடுகிலும் இருந்தனர். அவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் படுதோல்வியையே கண்டன.
அல்லாஹ்வுடைய பிரகாசத்தை தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந் நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்.
(அத்தியாயம்: அஸ் ஸஃப்பு, வசனம்: 08)
உறுதியான ஈமானுள்ள மக்கள் ஆத்திரங்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பது வியப்பானதல்ல. என்றாலும் ஷரீஅத்தின் வரம்புகள் மீறப்படுவதனை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. சமயநிந்தனை செய்யும் எவராயினும் எந்தநாட்டைச் சேர்ந்த வராயினும் சட்டத்தை முன்னிறுத்தி கடுந்தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலமே உலக நிம்மதியை கண்டு கொள்ள முடியும். சமயங்களைத் தூற்றுவதும், இழிவுபடுத்துவதும் எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை. மாறாக சமயங்களை பின்பற்றுவோர் மத்தியில் வீணான குழப்பங்களையும் சண்டைகளையுமே அவை மூட்டிவிடுகின்றன.
இத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று கோருவதன் மூலமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்வதன் மூலமுமே முஸ்லிம்கள் தங்கள் ஆத்திரங்களைக் கொட்டுகின்றனர்.
மேற்சொன்னவாறு இறுதி நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை மோசமாக சித்தரித்துக் காட்டும் படத்தைத் தயாரித்த, தயாரிக்கத் துணை நின்று வெளியிட்ட நாடுகளையும் நபர்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. உலகில் நிகழும் சில விடயங்களுக்கு மனித உரிமையென பெயரிட்டுக் கோஷம் கிளப்பும் நாடுகள் சமயநிந்தனை செய்வோருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை யாது என்பதே அனைவரதும் கேள்வியாகும்.
வேறு சாக்குப் போக்குகள் சொல்லித் தப்பிக் கொள்ளாமல் பகிரங்கமாக குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதே சரியானதும் முறையானதுமான நிலைப்பாடாக இருக்கமுடியும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூறிவைக்க விரும்புகின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
