இறுதித் தூதரைப் பற்றி மேலும் இரு திரைப்படங்கள் அமெரிக்காவில் தயாராகவுள்ளன. தற்போது உலகில் பல பகுதிகளிலும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய அமெரிக்க திரைப்படம் Innocence of Muslims இஸ்லாமிய மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மேலும் இரு திரைப்படங்கள் அமெரிக்காவில் தயாராகவுள்ளன என்ற தகவல் அதிரவைக்கின்றது.
Nakoula Basseley Nakoula உருவாக்கிய திரைப்படம், வெவ்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற காரணமாக உள்ளது. ஒரு அமெரிக்க தூதர் உட்பட சிலர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க தூதரகங்கள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன. படத்தை எடுத்தவர் சுயமாகவே தலைமறைவாக உள்ளார். ஆனால், தற்போது எடுக்கப்படவுள்ள இரு திரைப்படங்களும், கிட்டத்தட்ட இதே பாணியில் அமைந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.
காரணம், இந்த இருவருமே முன்னாள் இஸ்லாம் மதத்தவர். அதாவது, இஸ்லாமில் இருந்து மதம்மாறி பிற மதத்துக்கு சென்றவர்கள். அப்படியானவர்கள் இஸ்லாமைப் பற்றி படம் எடுத்தால், எப்படி அமையும் என்பதே சந்தேகத்துக்கு காரணம். கிடைத்துள்ள தகவல்களின்படி, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ள இருவரில் ஒருவர், மொசாப் ஹசன் யூசுப். பிறப்பால் இவர் பாலஸ்தீனியர். நீண்ட காலத்துக்கு முன், அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்கப் பிரஜை. இவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி 30 மில்லியன் டாலர் செலவில் படம் தயாரிக்கிறார். இவரது படத்தின் பெயர் மொஹாமட்.
லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த மொசாப் ஹசன் யூசுப், “பிரபல ஹாலிவூட் நடிகர் ஒருவர் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். மெல் கிப்சன் நடித்த The Passion of the Christ திரைப்படத்தின் சாயலில், இஸ்லாமைப் பற்றி படம் எடுக்கவுள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த மொசாப் ஹசன் யூசுப் என்பவர் பற்றி தெரியவந்துள்ள மற்றொரு தகவல், இவர் எகிப்திய கிறிஸ்துவர் ஜகாரியா போத்ரொஸ் ஹெனியின்னின் போதனைகளை பின்பற்றுபவர். அப்படியானால், படம் எப்படி அமையும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
இஸ்லாம் பற்றிய படம் எடுக்கும் இருவரில் மற்றையவர், கனடா நாட்டவர். பெயர் அலி சினா. ஈரானில் பிறந்து, அங்கேயே இஸ்லாமியராக வளர்ந்தவர். அதன்பின் கனடாவுக்கு வந்து மதம் மாறியவர். இவரது படத்துக்கான பட்ஜெட், 10 மில்லியன் டாலர். இந்தப் படங்கள் வெளியானால், என்னென்ன சிக்கல்கள் வந்து சேருமோ தெரியவில்லை. அமெரிக்க அரசு தடுத்தால்தான் உண்டு.
Tags
உலகச் செய்திகள்
