எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்கள் ஷரீஆவின் வரம்புகளை மீறாதீர்கள் - ஜம் இய்யத்துல் உலமா வேண்டுகோள்


இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக நடாத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்கள் ஷரீஆவின் வரம்புகளை மீறாது செயற்படுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படும் அதே சமயம், இன்று வெள்ளிக்கிழமை சகல பள்ளிவாசல்களிலும் நபிகளாரின் மத்துவம் தொடர்பாக ஜும்ஆப் பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு கதீப்மார்களையும், சகல பள்ளிவாசல் நிர்வாகிகளையும் கேட்டுக் கொள்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்கி எம். எஸ். எம். தாஸிம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மையில் அமெரிக்காவில் இஸ்லாத்துக்கு எதிராகவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை மிக மோசமாகவும் நிந்தித்து வெளியிடப்பட்ட சினிமா திரைப் படத்தையிட்டு உலகளாவிய முஸ்லிம்கள் மனவேதனை அடைந்து கொதிப்புற்றுள்ளனர்.

இவ்வேளையில், சகல முஸ்லிம்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடாத்துவதிலோ கண்டனக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலோ எவ்வித தவறும் கிடையாது. என்றாலும் ஷரீஆவின் வரம்புகளை மீறாத வண்ணம் சகலரும் நடந்து கொள்ள வேண்டும்.

பாதைகளில் வாகனங்கள் செல்வதற்குத் தடையாக நடந்து கொள்ளல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளல், தீமூட்டி எரிக்கச் செய்தல் போன்ற செயல்களிலிருந்து சகலரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post