இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லிபியவின் பெங்காசியில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்டதை தொடர்ந்து மேலும் பல அரபு நாடுகளுக்கு போராட்டம் பரவியுள்ளது.
எகிப்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு கண்டனப் பேரணிகள்நடைபெற்றன. கடந்த2 தினங்களாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட மக்கள் நேற்று தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ‘மில்லியன் மார்ச்’சுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. ஆனால், இஃவானுல் முஸ்லிமீன் போன்ற அமைப்புகள் இந்த போராட்டத்தை வாபஸ் பெற்றன. இதனால் மஸ்ஜிதுகளின் முன்னால் தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. லிபியா, யெமன் போன்ற நாடுகளில் போராட்டங்களின் போது தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததால்அமைதியாகவும், அடையாள நிமித்தமாகவும் போராட்டங்கள் அமையவேண்டும் என இஃவானுல் முஸ்லிமீன் செயலாளர் மஹ்மூத் ஹுஸைன் தனது அறிக்கையில் கூறினார்.
அதேவேளையில் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டபோது போலீஸ் தடுக்க முயன்றது. இதனால் மோதல் உருவானது. ராணுவம் கண்ணீர் புகையும், க்ரேனேடும் பிரயோகித்தது. அமெரிக்க தூதரகத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் யெமனில் நான்குபேர் கொல்லப்பட்டனர். சூடானில் நடந்த போராட்டங்களிலும் தாக்குதல்கள் நடந்தன. இதனிடையே லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லிபியா அரசு அறிவித்துள்ளது.
நேற்று கத்தர் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள உமர்பின் கத்தாப் மஸ்ஜிதில் நிகழ்த்திய ஜும்ஆ உரையின் போது சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் அவை தலைவர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் இறுதித் தூதர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அவதூறுகளை கண்டித்தும் இறுதித் தூதருக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தார்.
இலங்கையிலும் முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.










