இலங்கை முஸ்லிம்களை எதிரிகளாக காட்ட முயற்சி - குவைத்தில் என்.எம்.அமீன்


இலங்கை முஸ்லிம்களை எதிரிகளாக காட்டுவதற்கு அண்மைக்காலமாக சில தரப்புகள் முயன்றுவருவதாகவும், இலங்கை முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான கருத்துக்களை பரப்புவதற்காக 19 சிங்கள் இணையத்தளங்கள் செயற்படுவதாகவும் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

குவைத் அரசாங்கத்தின் அழைப்பில் பேரில் அங்கு சென்றுள்ள என்.எம். அமீன் இன்று வெள்ளிக்கிழமை  ஜும்மா குத்பாவுக்குப் பிறகு (மஸ்ஜித் அல் பாரிஸ்.குவைட் ஸிட்டி) பள்ளியில் சிறப்புரை ஆற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர்,

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் சதி முயற்சிகளை எதிர்கொள்ள புலம்பெயர்ந்த தேசங்களில் வசிக்கும் நமது இலங்கைச் சகோதரர்கள் முன்வரவேண்டும். 

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 3 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் நிலைமை பரிதாபகரமான நிலையிலேயே காணப்படுகிறது. இலங்கை அரசாங்கமோ அல்லது சர்வதேச சமூகமோ வடக்கிலிருந்து புலிகளின் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களை கவனிப்பதில்லை.

குவைத்தில் வாழும் முஸ்லிம்கள் வடக்கில் ஒரு முஸ்லிம் கிராமத்தை அமைத்துக் கொடுக்க முன்வரவேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் மீளக்குடியேற நாம் உதவி செய்யமுடியும்.

இலங்கை முஸ்லிம்கள் அரச தொழில் வாய்ப்புக்களில் தொடர்ந்து திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டுமாயின் நமது முஸ்லிம் ஊர்களில் தொழில் பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் உள்ள நமது இலங்கை முஸ்லிம்கள் உதவ முன்வர வேண்டுமெனவும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

நன்றி : யாழ் முஸ்லிம்

Post a Comment

Previous Post Next Post