பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டது மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டிய தொன்றாகும். அத்துடன் இது போன்ற சம்பவங்கள் உலகின் எந்த பகுதியிலும் இனிமேல் நடைபெற கூடாது எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆகியன தெரிவித்தன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆகியன இணைந்து இன்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.முபாரக், பிரதி செயலாளர் தாஸிம் மௌலவி, அம்பாந்தோட்டை மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அர்ஹம் நுரி மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"ஏனைய சமயங்களை தாக்குமாறு இஸ்லாத்தில் ஒரு போதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தங்களின் மதம் தாக்கப்படும் போது கொதித்தெழுவதை யாராலும் தடுக்க முடியாது. எனினும் இவ்வாறான அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம்பெறமால் இருக்க ஏற்பாடுகளை மேற்கொண்ட வேண்டும்.
இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பௌத்தர்களின் பரம்பரையிலிருந்தே வந்தவர்கள். இதனால் எமது நாட்டில் பௌத்தர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுகின்றது. இந்த உறவு தொடர வேண்டும்.
இது போன்றே சர்வதேச நாடுகளிலும் பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் நெருங்கி செயற்பட வேண்டும். இதற்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எவ்வாறாயினும் சுமார் 19 சிங்கள மொழி மூல இணையத்தளங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் செயற்படுகின்றன.
இந்த இணையத்தளங்களை தடை செய்ய வேண்டும் என நாம் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன் நவீன சமுக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போலி பிரச்சாரங்களும் நிறுத்தப்பட வேண்டும்" என்றனர்.
ஆப்கானிஸ்தானில் பௌத்த சின்னங்கள் தாக்கப்பட்ட போது இலங்கையில் பௌத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டங்களில் முஸ்லிம்கள் கலந்துகொண்டமையும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நினைவுபடுத்தப்பட்டது.
இந்த சம்பங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் விசேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இ;ய்யதுல் உலமா சபை நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டமையை கண்டித்து முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கொழும்பிலுள்ள இலங்கைகான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மட் சபியுர் ரஹ்மானை சந்தித்து மனுவொன்றையும் கையளித்துள்ளது.
பங்களாதேஷில் விகாரைகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இலங்கையில் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்வதை போன்று பங்களாதேஷில் பௌத்தர்கள் முழு உரிமையுடன் வாழ அந்நாட்டு அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்களை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றது எனவும் குறித்த இந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(படங்கள்:Knowledge Box)





