அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபம் இடிந்து விழும் அபாயம் !!!

1956 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபம் கடந்த  இரு தினங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையின் போது பலத்த சேதமடைந்துள்ளது. 

அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் உள்ள மிகப் பழைய கட்டிடங்களில் ஒன்றான  இந்த பிரதான கட்டிடம் மிக நீண்ட காலமாகவே திருத்தப்படவேண்டிய தேவையில் இருந்தது. இது சம்பந்தமாக பல விடுத்தம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாடசாலை அதிபர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தும் அதற்கான நடவடிக்கைகள் திருப்திகரமான முறையில் எடுக்கப்படவில்லை. 

நூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்  கொண்டுள்ள இப் பாடசாலை, மிகக் குறைந்த வளங்களுடன் இயங்கி வரும் சந்தர்ப்பத்தில் இது போன்ற ஒரு அனர்த்தத்தை முகம் கொடுத்திருப்பது பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

சேதமடைந்துள்ள பிரதான மண்டபத்தில் மூன்று வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இக்கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் இதில் கல்வி கற்றுவந்த வகுப்பு மாணவர்களுக்கு வேறொரு  வகுப்பை கொடுக்கமுடியாத நிலை காணப்படுகிறது.

இது தொடர்பாக கோட்டைக்  கல்விப் பணிப்பாளர், மேல்மாகாண சபை கல்வி அமைச்சின் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாடசாலை அதிபர் மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மேல்மாகாண சபை கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் பாடசாலைக்கு வருகை தந்து சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டார்கள்.

மீண்டும் பழுது பார்த்து பாவனைக்கு எடுக்க முடியாத நிலையில் இருக்கும் இக் கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த மேல்மாகாண சபை கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் இது தொடர்பாக கட்டடப் பொறியியாளர் அவர்களுக்கு அறிவிப்பதாக கூறினார்கள். 

இங்கு நடைபெற்ற மூன்று வகுப்புக்களில் 2012 ஆம் ஆண்டின் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு இணங்க விடுமுறை வழங்கி, ஏற்பட்டிருக்கும் இடப் பற்றாக்குறை தற்காலிகமாக  நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்திருக்கும் குறித்த கட்டிடம் இருக்கும் இடத்தில் புதிய கட்டிடம் ஒன்றை முடியுமான அளவு விரைவாக கட்டி முடிக்க ஊர் மக்கள், பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஊரில் உள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்ட பாடசாலை அதிபர், ஊரில் நடைபெறும் விசேட நிகழ்வுகளுக்காக அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தை  தற்பொழுது வழங்க முடியாது உள்ளதாக திஹாரிய நியூஸ் இனையத்தளத்திற்கு தெரிவித்தார். 

1 Comments

  1. Maatram enpathu ella paadasaalaikkum avasiyamanathu.Intha kattidam maaramal iruppadu iyatkaikke porukkavillai polum..

    ReplyDelete
Previous Post Next Post