ஹஜ் பெருநாள் தினத்தன்று மல்வத்து ஓயா பள்ளிவாசல் எரிப்பு முஸ்லிம்களை புண்படுத்துகிறது: MP ஹஸனலி கவலை

கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இருக்கும் வரை ஒரு பள்ளிவாசலையாவது இடிக்கவோ அல்லது அதன் மீது தாக்குதல் நடத்தவோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில் அநுராதபுரம் மல்வத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த பள்ளிவாசல் ஹஜ் பெருநாள் தினத்தன்று  அதிகாலை 2.30 மணியளவில் இனந் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது,  முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கின்றது. அரசாங்கம் இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி. ஹஸனலி நேற்று தெரிவித்தார். 
மல்வத்தை லேன் பள்ளிவாசல் என்றழைக்கப்படும் குறித்த தக்கியாவானது 1994 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும் அங்கு குர்ஆன் மதர்சா ஒன்றும் இயங்கி வந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பள்ளிவாசலுக்கு மிகவும் அண்மித்ததாக பௌத்த விகாரை ஒன்று அமைந்துள்ளதாக தெரிவிக்கும் பிரதேசவாசிகள் கடந்த காலங்களில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சிறு சிறு முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும் பள்ளிவாசல் தீ வைத்து எரிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அநுராதபுரம் ஓட்டுப்பள்ளம் பகுதியில் அமைந்திருந்த சியாரம் ஒன்று பௌத்த பிக்குமாரின் தலைமையில் வந்த குழுவினரால் முற்றாக இடித்துத் தகர்க்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

Previous Post Next Post