பேஸ்புக்கில் சமய இன காழ்ப்புணர்வை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது.
பேஸ்புக் பயன்பாட்டுக்கான நிபந்தனைகளின் படி இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதை தடுத்து வருகின்றது என இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்தார்.
இது பற்றி ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பேஸ்புக் உடன் தொடர்புகொண்டோம். பேஸ்புக் நிபந்தனைகள் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கின்றன. இதனால் இன மற்றும் மத காழ்புணர்வுகளை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என அவர்கள் எமக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணி நீதி அமைச்சுடன் பேச்சு நடத்தவுள்ளது எனவும் அவர் கூறினார். இதேவேளை, பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை நாம் பொலிஸ் கணணி பிரிவுக்கு அனுப்பி வருகின்றோம் என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
பேஸ்புக்கை பயன்படுத்தி இன மற்றும் மத காழ்ப்புணர்ச்சிகளை பரப்பும் போக்கு இளைஞர்களிடையே பரவி வருகின்றது. பல போலி பேஸ்புக் பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கடவுச்சொலை திருடுதல், புகைப்படங்களை அனுப்புதல் என்பன பேஸ்புக் தொடர்பாக அதிகம் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளாகும்.
நன்றி: தமிழ் மிரர்
