இலங்கைக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்போகும் அமெரிக்கா!


அமெரிக்கா தனது இறைச்சிச் சந்தையை மீண்டும் ஆரம்பித்து மாட்டிறைச்சியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு மூடப்பட்ட அமெரிக்காவின் இறைச்சி சந்தையானது மீண்டும் திறக்கப் பட்டுள்ளதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதாக அமெரிக்க இறைச்சி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதித் தலைவர் ஜோயிஸ் ஹக்கர்ட் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள சமாதானத்துடன் கூடிய சூழலையும் அதன் பொருளாதார வளர்ச்சிப் போக்கையும்   இதன் பொருட்டு பயன் படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும்  அமெரிக்கா இறைச்சி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கைக்கு அமெரிக்காவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்பட உள்ளமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அண்மைக்காலத்தில் இலங்கையில் மாடு அறுப்பதில் உள்ள  தடைகள் மற்றும் சிக்கலான நிலைமைகளுக்கும் இதற்கும்  இடையில் தொடர்பிருக்கலாம் என அச்சம் வெளியிடப் பட்டுள்ளது. அண்மையில் ஹரிஸ்பத்துவ   பிரதேசத்தில் மாடுகள் அறுக்க பிரதேச சபையினால் தடை விதிக்கப் பட்டிருந்தது.அத்துடன் கண்டி மாநகர சபையிலும் தடை  பிரேரணை ஒன்றை கொண்டுவர முயற்சிக்கப் பட்டிருந்தது. இந்நிலையிலேயே அமெரிக்காவிலிருந்து  மாட்டிறைச்சி  இறக்குமதி குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப் படவுள்ள இறைச்சிக்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை  ஹலால் சான்றிதழ் வழங்குமா என்ற சந்தேகமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

நன்றி : விடிவெள்ளி

Post a Comment

Previous Post Next Post