அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "அமெரிக்க மக்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே ஒபாமா கவனிக்க வேண்டும், மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும்" என்று தாலிபான்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளமை குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "ஆப்கன் மீது தொடுத்த போரில் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது. இதை இப்போதாவது ஒபாமா புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் (ஆப்கன்) புனித மண்ணில் உள்ள அமெரிக்க படைகளை முற்றிலும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்." என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் " உலக நாடுகளுக்கு எல்லாம் போலீஸ்காரர் போல அமெரிக்க செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்க மக்கள் பிரச்னைகளை மட்டும் ஒபாமா பார்த்தால் போதும். மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டு விட வேண்டும். அமெரிக்கா பல போர்க் குற்றங்கள் புரிந்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா மக்கள் மீது மற்ற நாட்டினர் வெறுப்பில் உள்ளனர். அதை இன்னும் அதிகரிக்க வேண்டாம்" என்று தனது செய்தியில் முஜாகித் கூறியுள்ளார்.
Tags
உலகச் செய்திகள்
