தலைப்பில் சமூக வலைப்பின்னல்கள் என்பதற்கு பதிலாக FACEBOOK என நேரடியாக பிரதியிடப்பட்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். இன்றைய இளைய முஸ்லிம் சமூகத்தினரிடையே கொடிகட்டிப் பறக்கும் ஆவணம் இது. உலக சனத்தொகையில் முஸ்லிம்கள் தானா அதிகம் என எண்ணுமளவுக்கு சிதறி காணப்படுகின்றனர். எனினும், சர்வதேச மட்டத்தில் தொடர்புகளுடைய இவர்களால் ஏன் இன்னும் மாற்றத்தை நோக்கி நகர முடியாதுள்ளது என்பது வினாவாகவே உள்ளது.
அது அவ்வாறிருக்க ஒட்டு மொத்த சமூக வலைப்பின்னல்களிலும் ஊடுருவியிருக்கும் எம் இளைய சமூகத்தினர் குறித்த ஓர் வேறுபட்ட கோணத்தினாலான விமர்சனமாக இது அமைய இருக்கிறது. தொடர விரும்பாமலும் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏனெனில் அனாச்சாரத்தை அரவணைத்து, அன்பு காட்டிய பாவத்திலிருந்து என்னையும் உங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு சில காலம் வரை மனிதனுக்கு இவ்வுலகில் வாழ அவகாசமளித்த இறைவன் சில சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதாக வாழுமாறும் பணித்துள்ளான். தனது அருட்கொடைகளை பயன்படுத்திக்கொள்ள சுதந்திரத்தை வழங்கிய அவன் அவற்றுக்கான எல்லையையும் தெளிவாகவே காட்டியிருக்கிறான். “கட்டுப்படுதல்” எனும் பதத்திற்கு சொந்தக்காரர்களான நாம் இவ்வுலகில் ஒரு வட்டத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது எங்களில் யார் சிறந்தவர்? யார் மாறு செய்பவர்? என்பதை அறிவதற்காகவே.
இங்கு எமது இளைய சமூகத்தினர் கரிசணை காட்டத் தவறியிருக்கும் மிக முக்கிய வரம்பான அஜ்னபி-மஹ்ரமி வேறுபாடு தொடர்பான சட்டங்கள், இன்னும் சில சமூக நடத்தை தொடர்பான சட்டங்கள் பற்றியதாகவும் இது தொடர இருக்கின்றது. நாகரீகமான சகவாழ்வுக்கு இறைவனால் போடப்பட்ட இவ் வரம்புகள் குறித்து இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு தூரம் வேண்டப்பட்டுள்ளது என்பது குறித்தும் அது தொடர்பாக அறிவூட்டப்படுகிறார்களா என்பது குறித்தும் பேசப்பட வேண்டியதன் நோக்கம் நாளுக்கு நாள் அறியாமையின் விபரீதங்களுடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறித்த சட்ட வரம்புகளைப் பேனி தன்னையும், சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் வெற்றியாளர்களும் இருக்க இதில் பலவீனர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். முடியுமானவரை பேணுபவர்கள், முடியாத போது விட்டு விடுபவர்கள், வெறுமனே பேச்சில் சட்டம் காப்பவர்கள், அது தொடர்பாக கண்டு கொள்ளாதவர்கள், அறியாதவர்கள் என பல வகையினர் இருக்கின்றனர். இவர்கள் குறித்து பேசுவது என்பது சற்று கடினமான விடயமாகும். ஏனெனில், இவர்கள் பல துறையினர். ஓரிரு கட்டுரைகளினாலோ, மேடை பேச்சுக்களாலோ வகுப்புக்களாலோ இவ் இளைஞர்களை வழிப்படுத்தல் என்பது சாத்தியமானதன்று. எனினும் இன்ஷா அல்லாஹ் முயற்சிகள் தொடரட்டும்.
இன்னுமொரு வகையினரும் இருக்கின்றனர். இவர்கள் குறித்தே அதிகம் அறியப்பட வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இவர்கள் அறிந்தும் அறியாதவர்கள். அறியாமையினாலோ, பொடுபோக்கினாலோ, பாரதூரம் தெரியாமையினாலோ இவர்கள் சில போது வழி தவறி விடுகின்றனர். சமூக வாழ்வின் தான் அறிந்த சட்டங்களை பேணும் இவர்கள் சர்வதேச மட்டங்களில் சமூக வலைப்பின்னல்களில் தமது வரம்புகளை மறந்து விடுவதை காண்கிறோம். பல போது இவர்கள் இஸ்லாமிய இயக்க ஊழியர்களாகவும், தஃவா பணியில் தன்னையும் பிரதிநிதியாக ஈடுபடுத்தியவர்களாகவும் இருப்பதே கவலை.
வெளி உலகிலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட இளைஞனை மறைவில் ஜாஹிலியத்தின் வாரிசுகளாக்கும் மேற்கின் சக்திக்குள் நாங்களும் சிக்குண்டுள்ளோம் என்பதை எமது இஸ்லாமிய இயக்க ஊழியர்கள் கூட அறியாதிருக்கின்றனர். போலியான வாழ்க்கைச் சித்திரத்தை காட்டி உலகில் தான் நினைத்தவைகளை சாதிப்பதற்காக எதையையும் செய்யத்துணியும் இந்தச் சடவாதிகள், அவர்களைக் குரலெடுத்து பகிரங்கமாக எதிர்க்கும், அவர்களின் பொருட்களை பகிஷ்கரிக்கும் ஊழியர்களைக் கூட தொழிநுட்பம் என்ற பேரில் வலைப் போட்டு அவர்களின் ஈமானுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் உலகில் அவர்களின் திட்டங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈமானிய விருட்சம் வளராத வரை தமக்கு அறிவுறுத்தல் எதுவுமில்லை என்பதை அச்சதிவாதிகள் நன்கே அறிவார்கள். கேவலம் என்னவென்றால் இறைவனுக்கு மட்டும் அடிபணிய வேண்டிய நாங்கள் தடம் பிறண்டு அறிந்தோ அறியாமலோ அற்பமான பலவற்றிக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். சதிகளில் பலியாடாகி இருக்கிறோம்.
எதற்காக உபயோகிப்பது? அங்கு எனது தேவையென்ன? வரையறைகளுக்கு உட்பட்டதா? வழி தவறிச் செல்கிறேனா? அல்லாஹ் இதைப் பொருந்திக் கொள்வானா? தீனுக்கும், உம்மத்துக்கும் இதனால் பயன்களுண்டா? என்ற எந்த கேள்விக்கும் விடை தெரியாமலேயே வெறுமனே நேரத்தைக் கழிப்பதற்காகவும், அற்ப இன்பத்துக்காகவும், இன்னும் பல ஷரீஆ அனுமதிக்காத நோக்கத்துக்காகவும் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தனக்குள் ஆழ்த்தி வைத்துக் கொண்டிருக்கிறது இந்த சமூக வலைப்பின்னல்கள். அல்லாஹ்வின் சிந்தனைக்கு மட்டுமே உரித்தான மனதுக்குள் எத்தனையோ புது விடயங்கள். இது அடிமைத்தனம் அல்லவா? இணைவைப்பிற்கு இட்டுச் செல்லாதா?
தஃவா என்ற பேரில் ஆரம்பித்த அந்நிய பெண்களுடனான தொடர்புகள் விபரீதத்தில் முடிந்த பல சம்பவங்களைக் கூட அதே சமூக வலைப்பின்னல்களில் கேள்விப்பட்டதை அடுத்தும் எம்மவர்கள் கரிசணையற்றே கிடக்கின்றனர். தன் நிலைத் தெரியாது, வரையறைகள் தெரியாது உறவாடச் சென்ற இயக்க ஊழியர்களின் நிலையே இவ்வாறிருக்க சராசரி இளைஞன் ஒருவனை பற்றி கூறவே தேவை ஏற்படாது.
தஃவாப் பணியின் நோக்கத்தில் குர்ஆன் ஆயத்துக்கனையும், ஹதீஸ்களையும் கருத்துக்களையும் POST செய்யும், COMMENT செய்யும் பலரும் சில விடயங்களில் தெட்டத் தெளிவாக அனாச்சாரத்தை வெளிப்படுத்திவிடுகின்றனர். எனவே இவர்களின் மேற்குறித்த நோக்கங்கள் விமோசனமடையவும் மாட்டாது, வெற்றி பெறவும் மாட்டாது. ஏனெனில் தீனில் ஒரு பகுதியை எடுத்து மற்றதை விட யாருக்கும் எந்த அவகாசமும் கிடையாது.
மேலும் உலக நியதிப் படி, சொல்லப்படும் விடயத்தை விட சொல்பவரையே அதிகம் நோக்குகின்றனர். ஆகவே சிறந்த உதாரணங்கள் எம் மத்தியில் தேவைப்படுகின்றனர். ஸீராவிலும் ரஸூல்(ஸல்) அவர்கள் கூறியதை விட, அங்கீகரித்ததை விட, செய்து காட்டியவைகளே அதிகம். மூலமாகவே மக்கள் கவரப்பட்டனர் என்பது நிதர்சனம்.
வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே காட்டக் கூடிய தனது அழகை உலகமே ரசிக்கும் அளவுக்கு போட்டு வேடிக்கையிடுகிறது எமது பெண் சமூகத்தின் சிலர். ஒட்டு மொத்த இளைய சமூகத்தையும் விபரீதமான எண்ணத்தில் ஆழ்த்திய படுபாவத்தை சுமந்திருப்பதை அவர்கள் எண்ணுவதே இல்லை. அவர்களின் செயற்பாட்டுக்கு உரம் சேர்க்கும் அளவின் COMMENTS, LIKE என்ற பெயரில் கேவலம் கெட்ட வடிவில் வாழ்த்துச் செய்திகளை பரிமாறுகிறார்கள் எமது ஆண்களில் சிலர். ஈமானின் ஒரு பகுதியான வெட்கத்தை தொலைத்த இளையவர்கள், குறிப்பாக பெண்கள் இங்கு தங்களுக்கு இஸ்லாம் வகுத்த எல்லைகளைத் தாண்டி சுதந்திரமாக உலா வருவதை காண கண்களே மறுக்கின்றன.
தனிமையிலேயே பல விடயங்களை சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை வெறுமனே சில புகைப்படங்களுக்கு பின்னால் சில POST, COMMENT களுக்கு பின்னால் CHATTING களுக்கு பின்னால் சீரழித்து தனது நோக்கத்தையே மறந்த நிலையில் நேரத்தை வீணடித்துக் கொண்டும் அழைகிறார்கள்.
முஸ்லிம் என்ற நாமத்தை சூடிய நாம் குறைந்த பட்சம் சில வார்த்தைகளிலாவது, தோற்றத்திலாவது பிறருக்கு சான்று பகருவதை விட்டு நாகரீகமற்ற வார்த்தைகளினாலும், திரைப்பட நட்சத்திரங்களின் புகைப்படங்களாலும், சினிமாப் பாடல்களாலும் எமது WALL களை அழங்கரித்துக் கொள்கிறோம்.
“உங்களது மனோ இச்சையானது நான் கொண்டு வந்த சத்தியத்தை பின் தொடராத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்’’ (ஹதீஸ்)
உலக மக்களுக்கு சான்று பகர வந்த நாம் எங்கே இருக்கிறோம்?
பகிரங்கமாக அரங்கேறும் உம்மத்தின் நல்லவைகள் பிறரின் கண்களுக்கு எட்டுவதற்கு முன்னே எங்கோ ஒரு மூலையில் நிகழும் அனாச்சாரம் அவர்களை எட்டிவிடுகிறது. இது உலகின் யதார்த்தம். ஏன் இதை நம் இளைஞர்கள் சிந்திக்கத் தவறியிருக்கிறார்கள்?
நவீன போக்கை அறிந்த அறிவாளர்கள் பலரும் இருப்பதை நான் மறுக்கவில்லை. தொழிநுட்பங்களைக் கையாள்வது எப்படி என்பது பற்றி இவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். தஃவாவுக்காக தன்னாலான ஒவ்வொரு அசைவிலும் முயற்சிக்கும் உதாரணப் புருஷர்களாக வாழும் இவர்கள் தான் வெற்றியாளர்கள். இஸ்லாமிய சகோதரத்துவத்தை உரியவாறு பேணும் பல குழுக்களையும் இச் சமூக வலைப்பின்னல்களில் அவதானிக்கக் கூடியதால் மகிழ்ச்சியடைகிறேன். இவர்கள் ஏதோ ஒரு சாதனைக்காக நோக்கம் தவறாது உழைப்பதையும் அவதானித்திருக்கிறேன்.
“(இத்தகுதிக்குரியோர்) எத்தகையோரென்றால்; அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங் கொண்டார்கள்; இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன (ஏனென்றால்) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் நிச்சயமாக இதயங்கள் அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீர்களா!” (அல்குர்ஆன்: 13:28 )
Tags
கட்டுரைகள்

Jazakallahu Khairan
ReplyDeletewell done admin, great job !!
ReplyDelete