நாய்கள் என்றாலே அதன் நன்றி உணர்வும், நாக்கை தொங்கப்போட்டு ஓடிவருவதும், கரன்ட் கம்பத்தை பார்த்தால் காலை தூக்குவதும் ஞாபகம் வரும். அவற்றின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் நோக்கில் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறது நியூசிலாந்தை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு. நாய்களுக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்துள்ளது. இதற்காக இன்டோர் பயிற்சி மைதானமும், நாய்களுக்காக என்றே பிரத்யேகமாக மரத்தால் மினி வாகனம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். கார் போலவே சீட், ஸ்டியரிங், பிரேக் எல்லாம் இந்த வாகனத்தில் உள்ளது. ‘ரெடி ஜூட்’ என்றதும் 10 மாத நாய் போர்ட்டர், ஜம்மென்று ஏறி சீட்டில் உட்கார்ந்து கொள்கிறது.
‘ஸ்டார்ட்’ என்றதும், பட்டனை அழுத்துகிறது. பயிற்சியாளர் மார்க் வெட் சொல்லச் சொல்ல, மிக சரியாக செய்கிறது போர்ட்டர். ஸ்டியரிங்குக்கு பக்கத்திலேயே ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் உள்ளன. ஒரு வித பதற்றம் இருந்தாலும், இந்த பக்கம், அந்த பக்கம் மாறி மாறி பார்த்தபடியே ஸ்டியரிங்கை ஸ்டைலாக திருப்புகிறது. ‘பிரேக்’ என்று சொன்னால், ஸ்டியரிங்கில் இருந்து கையை (முன்னங்காலைத்தாங்க) எடுத்து பிரேக்கை அழுத்துகிறது. போர்ட்டர் மட்டுமின்றி, மோன்டி என்ற ஒன்றரை வயது நாய், ஜின்னி என்ற ஒரு வயது நாய் ஆகியவையும் தற்போது கார் டிரைவிங் பயிற்சி பெற்று வருகின்றன.
8 வார பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்த முன்று நாய்களும் தற்பொழுது நிஜ காரையே ஓட்டிகாட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக, நிஜ காரை நாய் ஓட்டுவதற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
வினோதம்






