நான் மேர்வின் சில்வா கூறுகிறேன். உடனடியாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விலகிச் செல்ல வேண்டும். புதிதாக மலர்ந்த தாமரையைப் போல் பதவி விலகுவதே பிரதம நீதியரசருக்கு நல்லது என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.
பிரதம நீதியரசர் நேற்று பாராளுமன்றத் öதரிவுக்குழுவின் இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ள சென்ற வேளையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நீதிமன்றத்தையும் விட மேலானதே பாராளுமன்றம். இதனை கௌரவிக்க அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக காணப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அவதானித்து கொண்டு உடனடியாக விலகிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
புதிய தாமரைபோல் பதவி விலகிச் செல்வதா? அல்லது வாடிய தாமரையைபோல் செல்வதா என்பதனை பிரதம நீதியரசர் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் நான் மேர்வின் கூறுகிறேன். உடனடியாக பிரதம நீதியரசர் விலகிச் செல்ல வேண்டும் என்றார்.
