நேற்று இரவு எபிலிபிட்டிய, சீய கனுவ, கொடிகந்த பிரதேசத்திலும் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்திலும் நேற்று பகல் வேளையில் மீன் மழை பெய்திருந்தது. அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப் படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கபட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.
இதற்கு முன் நாட்டின் பல பகுதிகளில் சிவப்பு மழை பெய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இது இப்படி இருக்கையில் நேற்று புளத்சிங்கள, கோவின்ன பகுதியில் ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்தியாவின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிக்குப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
