சவுதியில் மரண தண்டனை விதித்து மரணமான
ரிசானா நபீக்கின் குடும்பத்துக்கு மூதூரில் வீடொண்றை நிர்மாணித்துக்
கொடுக்கும் படி வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
திலான் பெரேரா தெரிவித்தார்.
அமைச்சர் நேற்று முன்தினம் கொழும்பு தெவட்டஹா பள்ளிவாசலில் ரிசானா
நபீக்குக்கு துஆப் பிரார்த்தனையும் மற்றும் ரிசானா சார்பாக கொழும்பில்
வாழும் 500 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி
வைக்கப்பட்டது.
இந் நிகழ்வினை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வில் ஹசன் மௌலான துஆப் பிராத்தனை நிகழ்த்தினார். இந் நிகழ்வில்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் நகீப் மௌலானாவும்
ஐனாதிபதியின் பௌத்த மத ஆலேசகர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து
கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்தாவது-
ரிசானாவின் மரணத்திற்கு பின்னர், இனி வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக
செல்பவர்களது வயது எல்லை 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து
நடவடிக்கைகளையும் எனது அமைச்சு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ரிசானாவின் சகோதரி ஒருவருக்கு திருகோணமலையில் உள்ள வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழில் ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நஷ்டஈடாக 10 இலட்சம் ருபாவை ரிசானாவின்
பெற்றோரிடம் வழங்குவதற்கு எனது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
அமைச்சர் தெரிவித்தார்.
ரிசானாவை விடுவிக்க நானும் எனது அமைச்சின் செயலாளர் வேலைவாய்ப்புப்
பணியகத்தின் தலைவர் ஆளுனர் அலவி மௌலானா மற்றும் முன்னாள் பிரதியமைச்சர்
ஹூசைன் பைலா வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம். அன்சார் மற்றும்
மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ரிசானாவின் பெற்றோர்கள் என பலர் சவூதி
சென்றிருந்தோம். ரிசானாவின் எஜமானி எங்களில் யாரையும் சந்திக்கவோ பேசவோ
முடியாது என கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2 முறை சவூதி சென்று வாய் மூலமும்
எழுத்து மூலமும் அந்த நாட்டு மன்னர்க்கு வேண்டுகோல் விடுத்திருந்தார்.
மன்னர்கூட ஷரிஆ சட்டத்தில் தலையிட முடியாது. அவர் கூட ரிசானாவின்
எஜமானியிடம் மண்ணிப்பு வழங்கும் படியும் அதற்காக இழப்பு நிதி
வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார் என அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி ரிசானாவின் மூதூர் இல்லத்திற்குச் சென்று
இதுபோன்ற ஒரு நிகழ்வை நடாத்த உள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
