தமிழ் நாடு செங்கோட்டையில் முஸ்லிம் இரு குழுக்களுக்கிடையே மோதல்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில்  சுலைமான் நபி பள்ளிவாசல்  என்ற மசூதியில் ஒன்றாகத் தொழுகை நடத்தும் முஸ்லிம்களுள் ஒரு பிரிவு முஸ்லிம்கள்  மவுலூத் எனப்படும் பாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.   மற்றொரு பிரிவினர்   அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மசூதியின் முன் திரண்டதால் மசூதி இருக்கும் பகுதியில் பரபரப்பு உருவானது. 

முஸ்லிம்களுள் ஒரு பிரிவினர்  முகமது நபியைப் புகழ்வதற்காக மவுலூத் எனும் அரபுமொழிப் பாடல்களை மசூதியில் பாடுகின்றனர். மற்றொரு பிரிவினர்,  மசூதியில் தொழுகை தவிர இதுபோன்ற பாடல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று  செங்கோட்டையில் உள்ள சுலைமான் நபி பள்ளிவாசலில்  மாலை நேரத்தில்  தொழுகை முடிந்ததும் ஒரு பிரிவினர்  மவுலூது பாடத் தொடங்கினார்கள். இது குறித்துத் தகவல் அறிந்த மற்றொரு பிரிவு முஸ்லிம்கள்  ஆண்களும் – பெண்களுமாகத் திரண்டு  கைகளில்   எதிர்ப்புப்  பதாகைகளை ஏந்தியவாறு பள்ளிவாசலை நெருங்கியதால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பள்ளிவாசலுக்குள் ஏற்பட்ட கைகலப்பிலும்  தள்ளுமுள்ளிலும்  பள்ளிவாசல் இமாம் அப்துல் கலாம், திவான் மஸ்தான் புஹாரி, பைசல், மைதீன் மற்றும் கட்ட மைதீன் ஆகியோர் தாக்குதலில் காயமடைந்ததால் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தகராறு ஏற்படாமலிருக்க, தென்காசி துணை கண்காணிப்பாளர்  பாண்டியராஜன் தலைமையில்  இப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினராலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post