ரிஸானாவுக்கு ஒரு கடிதம்....



உனக்கு மரண தண்டனை கொடுத்தது சவுதி அரசு
ஆனால் உன்னை மரண தண்டனைக்காக அனுப்பி வைத்தது எம் சமூகம்.

உன்னை மன்னித்திருக்கலாம் என்று சொல்கிறார்கள் 
உன்னை இம்மண் மீதே வாழ வைத்திருக்கலாம் என்று சொல்கிறேன்.

நீ சவூதிக்கு சென்ற பிறகு தான் உன் கதை அறிந்தார்கள் எம்மவர்கள்
நீ வீட்டிலிருக்கும் போது அவர்கள் உன் கண்ணீர் துடைக்க மறந்தார்கள்.

நீ பசித்த போது உனக்கு உணவளிக்கவில்லை
நீ நோயுற்ற போது உன்னை பார்க்க வரவுமில்லை

நீ கல்வியை கைவிட்ட போது உன் கைபிடித்து தூக்கிவிடவுமில்லை
ஆனால் நீ மரணித்த போது மட்டும் கண்ணீர் விடுகிறார்கள்.

சட்டத்தில் ஓட்டை இருக்கிறதா என்று பார்க்கிறவர்கள் ஏன் உன் வீட்டு சுவரில் இருந்த ஓட்டைகளை கண்டுகொள்ளவில்லை

ரிஸானாவே!!!!
நீ மரணித்ததில் சற்று எம் சமூகம் இப்போது உயிர்கொண்டு எழுந்திருக்கிறதா??????

நீ வீடின்றி இருந்த போது எம்மவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு ஏப்பமிட்டார்கள் 
உன் வீட்டு அடுப்பெரிய நீ விறகு தேடிச்சென்ற போது எம்மவர்கள் சாப்பிட்டுவிட்டு பல் குத்த 'Tooth Prick' வாங்கிவந்தார்கள்

நீ உன் தங்கைக்கு சட்டை தைத்த போது 
எம்மவர்கள் வீட்டுக்கு A/C பூட்டினார்கள்

நீ சாப்பாடின்றி கவலைப்பட்டபோது 
எம்மவர்கள் பாகிஸ்தான் தோற்றதுக்காய் சாப்பிடாமல் விட்டார்கள்

நீ உன் வீட்டு கூறையில் ஓட்டை எண்ணிய காலத்தில்
எம்மவர்கள் தராவீஹுக்கு ரகஅத்து எண்ணினார்கள்.

உன் குடும்பத்தின் மானத்தை மறைக்க கஷ்டப்படபோது
எம்மவர்கள் தலைக்கு தொப்பி போடுவதில் சண்டையிட்டர்கள்.

உன் வீட்டுக்கூறை தலையில் முட்டுகிறது என்று சொன்னபோது
எம்மவர்கள் கனுக்காழுக்கு கீழால் கழுசன் தொங்குவது ஹராம் என்றார்கள்.

நீ உன் வீட்டுக்குள் குமுரி அழுதபோது
எம்மவர்கள் நுவரெலியாவில் குதிரைப் பந்தயம் பார்த்து சிரித்தர்கள்.

உன் வீட்டுக்கு மலசல கூடம் இல்லை என்று சொன்னபோது
எம்மவர்கள் இன்னொரு பள்ளிவாயலைக் கட்டி ஊரை பிரித்துச் சென்றார்கள்.

நீ உறங்குவதற்கு கட்டில்களில்லை  என்றபோது
எம்மவர்கள் வீட்டுக்குள்ளே Swimming Pool கட்டினார்கள்.

உன் வீட்டு வறுமைக்காய் கடல் கடந்து சென்ற போது
எம்மவர்கள் கடல் நடுவில் கல்யாணம் நடத்தினார்கள்.

நீ சாப்பிடாமல் தூங்கிய போது
எம்மவர்கள் அதிகம் சாப்பிட்டதால் நோயாளியானார்கள்.

ரிஸானா! 
நீ எம் சமூகத்துக்கு ஆயிரம் ஆயிரம் செய்திகள் சொன்னாய்
அவை அவர்களுக்கு கேட்டிருக்காவிட்டால் இதோ நான் மீண்டும் சொல்கிறேன்

இன்னும் இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் 'ரிஸானாக்கள்' வாழ்வதை நீ காட்டித்தந்தாய்,
அவர்களை நீ காப்பாற்றச் சொன்னாய்.

புனிதப் பூமியில் அவர்கள் ஹராமாய் வாழ்ந்திடாமல் இந்த மண்ணிலே அவர்களை புனிதத்தோடு வாழ வைக்கச் சொன்னாய்.

எம் கொடைவள்ளல்கள் வருடா வருடம் ஹஜ்ஜுக்கு செல்வதை விட்டு வருடா வருடம் ஓர் ஏழைக்கு வீடு கட்டச் சொன்னாய்.

ஓவ்வொரு ரமழானிலும் உம்ரா செய்வதை விட்டு ஓர் அநாதைக்கு அறிவு கொடுக்கச் சொன்னாய்.

இன்னும் நீ சொன்னாய்...
தஃவாக் களத்தில் கருத்துச் சண்டையிடுவதையிட்டு வறுமை நிலத்தில் பயிர் விதைக்கச் சொன்னாய்.

பல ஆயிரம் செலவளித்து கொடி கட்டி கந்தூரி கொடுப்பவர்களுக்கு பள்ளிக்கு அருகாமையில் பாடசாலை கட்டச்சொன்னாய்.

பள்ளிவாயல்கள் கட்டி மனிதர்களை கூறுபோடுவதை விட்டு மனிதத்தை வாழ வைக்கும் மனிதர்களை உருவாக்கச் சொன்னாய்.

மனிதர்களின் ஈமானை அளவிட்டு பரிசும், பட்டமும் கொடுப்பதைவிட்டு எம் சமூகத்தின் பிரச்சினைகளை அளந்து தீர்வு தேடச்சொன்னாய்.

நீ மரணித்தாய் அது அல்லாஹ்வின் நாட்டம் உனக்கு சுவனத்துப் பாக்கியம் கிடைக்க வேண்டும் .

நாம் உயிரோடுதான் இருக்கிறோம் இதன் பிறகாவது நாம் வாழும் பூமியில் ரிஸானாக்கள் பிறந்திடாமல் அதனை குட்டி சுவனமாக்குவோம்.
-இன்ஷா அல்லாஹ்-

-Ash. Zihan (Naleemi)-

1 Comments

Previous Post Next Post