நுவரெலியாவிலும் விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் முடிவு.


நுவரெலியாவின் ஹாவாஎலிய பகுதியில் உள்ளூர் விமான நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நுவரெலியாவில் விசேட கூட்டமொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விசேட கூட்டத்தில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம, அமைச்சர் சீ.பி. ரத்னாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர் நவீன் திஸாநாயக்க, பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், ஜனாதிபதி செயலக பிரதம அதிகாரி காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக ஜனாதிபதி ஹாவாஎலிய பகுதிக்கு விஜயம் செய்து விமான நிலையம் அமைக்கப்படவுள்ள பகுதியை பார்வையிட்டார். புதிய விமான நிலையத்திற்கான வரைபடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். மிக விரைவாக விமான நிலையத்தை அமைக்குமாறும் ஜனாதிபதி அதி காரிகளுக்கு உத்தரவிட்டார்.

900 மீற்றர் நீளத்திலும் 45 மீற்றர் அகலமும் கொண்டதாக  அகலமான ஓடு பாதை அமைக்கப்படவுள்ளது. சீரற்ற காலநிலை ஏற்பட்டபோதும் எவ்வித அச்சமுமின்றி விமானங்களை தரையிறக்கக்கூடியவாறு நவீன தொழில் நுட்பங்களை கொண்டதாக அமையவுள்ளது. ஹாவாஎலிய பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு குழுமியிருந்த பொதுமக்களுடனும் உரையாடினார்.

Post a Comment

Previous Post Next Post