சவூதி கொலைக்காரர்களிடமிருந்து இலங்கை பணிப்பெண்களை பாதுகாக்க உரிய
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைக்கமர்த்திய
ரிஸானா நபீக்கை குழந்தையை பராமரிக்குமாறு கூறியமைக்காக சம்பந்தப்பட்ட
சவூதி குடும்பத்தையும் தீர விசாரிக்காது முஸ்லிம் சட்டம் என்ற பேரில்
அப்பாவியான இலங்கை முஸ்லிம் பெண்ணை கொலை செய்தமைக்காக அந்நாட்டு அரசிற்கு
எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின்
மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே முஜீபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை பணிப்பெண்ணான ரிஸானா நபீக் அந்நாட்டு சிறையில் கொலைக் குற்றத்தின் பேரில் அடைக்கப்பட்டார். இவரை விடுதலை செய்ய அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதியமைச்சரான ரவூப் ஹக்கீம் ரிஸானா விடுதலையாகப் போவதாக ஊடகங்களுக்கு கூறினார். ஆனால் மறுநாள் ரிஸானாவின் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சவூதி மன்னருடன் இலங்கை அரசு சந்திப்புக்களை மேற்கொண்டு பேசவில்லை. மாறாக சுற்றுலாப் பயணங்களையே இலங்கை பிரதிநிதிகள் மேற்கொண்டனர். உண்மையில் ரிஸானாவின் கொலைக்கு இலங்கை அரசும் சவூதி அரசுமே பொறுப்புக்கூற வேண்டும். எத்தனையோ இலங்கைப் பணிப்பெண்கள் மற்றும் கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கு பணிப்பெண்ணாக சென்று பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை பெண்களை விற்கும் வியாபாரமே இடம்பெறுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.