பிக்கு ஒருவரை ஜனாதிபதியாக்க சர்வதேசம் சதி : விமல் வீரவன்ச


நாட்டில் பெளத்த -முஸ்லிம் முரண்பாடுகளை தோற்றுவித்து அதன்மூலம் இன மோதல்  ஒன்றை தோற்றுவித்து இறுதியில் சிங்கள பெளத்த அரசொன்றை ஏற்படுத்தி பிக்கு ஒருவரையோ அல்லது அது சார்ந்த ஒருவரையோ ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவர சதிமுயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற யுத்தத்தின் பின்னர் இலங்கையும் குற்றப்பிறேரனையும் என்ற  தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில் தெரிவித்ததாவது:
அரசியல் ஏகாதிபத்திய போட்டியில் சீனாவை எதிர்கொள்ள இலங்கை அரசியலை தமக்கேற்றாப்போல் மாற்றிக்கொள்ள மேற்கத்தேய சக்திகள் முயற்சிக்கின்றன. சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததும் அவரை பயன்படுத்தி இலங்கையை போர் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த முயற்சிக்கப்பட்டது. தற்போது ஷிராணி பண்டார நாயக்கவை வீட்டுக்கு அனுப்பியதும் இலங்கையின் நீதித்துறையில் சுயாதீனத்தன்மை இல்லை எனக்கூறி சர்வதேச அளவில் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.சர்வதேச சதியின் அடுத்த கட்டம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை இலக்காக் கொண்டுள்ளது.

அண்மைக்காலமாக சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில்  தோற்றுவிக்கப்பட்டுள்ள  முரண்பாடுகளால்   இறுதியில் பொறுமையிழந்து இன மோதலொன்று ஏற்படும். அதனை அடுத்து அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் மக்கள் அந்த ஆதரவினை விளக்கிக்கொள்வர். அதனை அடுத்து முழுமையான சிங்கள பெளத்த அரசொன்றை முன்னிறுத்தி பிக்கு ஒருவரோ அது சார்ந்த ஒருவரோ ஜனாதிபதி வேட்பாளராகலாம். அதன்மூலம்  அரசையும் ஜனாதிபதியையும் கவிழ்த்து சர்வதேசத்தின் முன் குற்றவாளியாக காண்பிக்கவே சர்வதேசம் சதி முயற்சியினை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: விடிவெள்ளி 

Post a Comment

Previous Post Next Post