எந்த நடுநிலை முஸ்லிமும் விஸ்வரூபத்தை எதிர்க்க மாட்டார்கள்:கமல்ஹாசன்!


விஸ்வரூபம் தடையை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஸ்வரூபம் திரைப் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் வைத்த நிலையில் அந்தத் திரைப்படத்தை தமிழக அரசு நேற்று தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்தத் தடை குறித்து நடிகரும் விஸ்வரூபம் படத்தின் இயக்குனருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன்.

மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.

சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.

அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post