''மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட
ரிசானா நபீக்கைப் பெற்று, வளர்க்க வாய்ப்பில்லாமல், அனுப்பி வைத்த அந்தப்
பெண்ணின் பெற்றோர் வேதனையையும் மற்றும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால்
போக்கிட முடியும்?'' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும்
என்று கோரி முரசொலியில் திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் ''
உலகம் முழுவதிலும் தூக்குத்தண்டனை என்பது அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்று
நான் கூறி வருகிறேன். அதைப்பற்றி பலவிதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட
வேண்டும் என்ற கருத்து கூறப்பட்ட நேரத்திலேகூட, அவர்களுக்கு தனிமைச்சிறை
ஆயுள் முழுவதும் வழங்கலாம் என்ற கருத்தினைத் தான் நான் தெரிவித்தேன்.
தூக்குத்தண்டனை கூடாது என்ற என்
எண்ணவோட்டத்திற்கு பதில் அளிக்கின்ற வகையில் ஒரு சம்பவம். அந்தச்சம்பவம்
பற்றி பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விரிவாக எழுதியிருக்கிறார். இதிலே
தூக்குத் தண்டனையை விட கொடுமையான தண்டனை! அதுவும் ஓர் இளம் பெண்ணுக்கு!
அந்தப்பெண் செய்த தவறு என்ன? அனைவரின் உள்ளத்தையும் உலுக்குகின்ற அந்தக்
கோரக்கொடுமை இதோ!
கடந்த ஜனவரி 9ஆம் தேதி சவுதி அரசாங்கம்
ஒரு மைதானத்தில் ரிசானா நபீக் என்ற இளம் பெண்ணை, கை விலங்கிட்டு,
பொதுமக்கள் முன்னிலையில் மண்டியிட வைத்து, அவள் தலையை நீண்ட அரிவாள் கொண்டு
சீவி கொலை செய்திருக்கிறார்கள், இல்லை தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஏன்
அந்தத் தண்டனை? என்ன பாவம் செய்தாள் அந்தப் பெண்?
2005ஆம் ஆண்டு தன் குடும்பத்திலே தனக்கு
உணவிட்டுக் காப்பாற்ற வழியில்லாத காரணத்தால், வீட்டு வேலை செய்வதற்காக
இலங்கையைச்சேர்ந்த ரிசானா நபீக் என்ற அந்த இளம் பெண், சவுதிக்குச்சென்றாள்.
அவள் பணிக்குச்சென்ற அந்த வீட்டிலே சமையல் செய்வது, வீட்டு
வேலைகளைச்செய்து, வீட்டு முதலாளியின் நான்கு மாதக் குழந்தையைப்பராமரிப்பது
ஆகிய பணிகளை முறையாக நிறைவேற்றி வந்தாள். ஆனால் அந்த நான்கு மாதக்குழந்தையை
இளம் பெண் ரிசானா நபீக்கொலை செய்தார் என்று குற்றச் சாட்டு
சுமத்தப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு -
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகக்கூறி - சவுதி நாட்டு நீதிமன்றம்
ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
அந்தத்தீர்ப்பை எதிர்த்து ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஹாங்காங்கில்
உள்ள ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் ரியாத் உயர் நீதிமன்றத்தில்
ரிசானா நபீக்குக்கு ஆதரவாக மேல் முறையீடு செய்தது.
அந்த மேல்முறையீட்டிலும் ரிசானாவிற்கு
விடுதலை கிடைக்கவில்லை. தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. ரிசானா சவுதி அரசாங்
கத்திற்கு அனுப்பிய கருணை மனுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வேறு வழியே இல்லையா? வழி இருந்தது. ஆம்,
சவுதி ஷரியத் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர் ஒப்புக்கொண்டால்,
எழுதிக்கொடுத்தால், குற்ற வாளிக்கு மன்னிப்பு வழங்கலாம். ஆனால் இறந்து போன
அந்த நான்கு மாதக் குழந்தை யின் பெற்றோர், அந்த இளம் பெண்ணை மன்னிக்கத்
தயாராக இல்லை.
"அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டிய ஒரு
தேவை எனக்குக்கிடையாது, நான் பாலூட்டும்போது குழந்தை மூச்சுத்திணறி அதன்
காரணமாக இறந்ததே தவிர, நான் பராமரித்துப் பாதுகாத்து வந்த அந்த நான்கு
மாதச்சிசுவை கொல்ல வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது" என்று ஓலமிட்ட
ரிசானாவின் குரலைக் கேட்க ஒருவருக்கும் மனம் வரவில்லை.
சவுதி அரசுக்கு தன்னுடைய கதையை மனுவாகத்தயாரித்து ரிசானா அனுப்புகிறாள். அந்த மனுவிலே,
"நான் 1-4-2005 அன்று சவுதி அரேபியாவுக்கு
வந்தேன். ஒன்றரை மாதங்கள் ஒரு வீட்டிலே வேலை செய்தேன். அந்த வீட்டில்
சமைத்தல், கழுவுதல், 4 மாதக் குழந்தையை பராமரித்தல் ஆகியவையே என் பணிகள்.
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை பகல் 12.30 மணி இருக்கலாம். வீட்டிலே யாருமே
இல்லை. எஜமானரின் நான்கு மாதக்குழந்தைக்கு நானே வழக்கம் போல புட்டிப்பால்
ஊட்டிக் கொண்டிருக்கும்போது, குழந்தையின் மூக்கின் வழியாக பால் வெளியே வரத்
தொடங்கியது. நான் குழந்தையின் தொண்டையை மெதுவாகத்தடவிக்கொடுத் தேன்.
குழந்தை கண் மூடியிருந்ததால், தூங்கி விட்டது என்று நினைத்து படுக்க
வைத்தேன். வீட்டு எஜமானி 1.30 மணியளவில் வீடு திரும்பி, சாப்பிட்டு விட்டு
அதன் பின்னர் குழந்தையைப்பார்த்தார். அதன் பின்னர் கோபம் கொண்டு எஜமானி
செருப்பால் என்னை அடித்துவிட்டு குழந்தையைத்தூக்கிக்கொண்டு போனார்.
அவர் அடித்த அடியின் காரணமாக என்
மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் என்னை போலீசாரிடம்
ஒப்படைத்தார்கள். போலீசார் என்னைத் தடியால் அடித் தார்கள். குழந்தையின்
கழுத்தை நெரித்ததாக கூறுமாறு சொல்லியே அடித்தார்கள். அப்படிக்கூறாவிட்டால்
எலெக்ட்ரிக் ஷாக்கொடுப்பதாகக் கூறினார்கள். என்னை வலியுறுத்தி அவர்கள்
எழுதிய பேப்பரில் கையொப்பமிடச் செய்தார்கள். அல்லா மீது ஆணையாக நான்
குழந்தையைக்கொல்லவில்லை, கழுத்தை நெரிக்க வில்லை."
ரிசானாவின் இந்தக் கருணை மனு ஏற்கப்
படவில்லை. இந்தக் குற்றம் நடைபெற்ற போது ரிசானாவின் வயது 17 தான். சர்வதேச
மனித உரிமை சாசனத்தின்படி "மைனர்" குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
விதிக்கப்படக் கூடாது.
நியாயம் வெற்றி பெறும் - தான்
விடுதலையாகி, இலங்கைக்கே திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையோடு இறுதி வரை
ரிசானா இருந்தாள். அவள் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக,
அந்தப்பெண்ணைச்சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம். மக்தூம் என்பவர், ரிசானாவின்
பெற்றோருக்கு அவளைச்சந்தித்தது பற்றி ஒரு கடிதம் எழுதியிருக் கிறார்.
அந்தக் கடிதத்தில்,
"சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக
அனுப்பப்பட்டு, கொலைக் குற்றம் சாற்றப்பட்டு, 9-1-2013 அன்று 11 மணியளவில்
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உங்கள் மகள் ரிசானாவை, அவருக்கு அந்தத்தண்டனை
நிறைவேற்றப்படுவதற்கு ஓரிரு மணி நேரத் திற்கு முன்பு சந்தித்தேன்.
அவரைச்சந்தித்த போது, அவரிடம் உனக்கு இறுதி ஆசைகள் ஏதாவது இருக்கிறதா என்று
கேட்டேன். அந்த நேரத்தில் கூட அவருக்கு தண்டனை பற்றி தெரியவில்லை. ஊருக்கு
நான் எப்போது செல்வது என்று என்னிடம் கேட்டாள். அப்போது தான் அவர்
ஊருக்குச்சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதை நான் தெரிந்து
கொண்டேன். மரண தண்டனை விதிக்கப்படு கின்ற அந்த நேரத்தில் கூட தன் மீது
சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றத்தை அவர் அறவே மறுத்தார். இன்றைய தினம்
உங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்போகிறார்கள் என்று தடுமாற்றத்துடன் நான்
கூறினேன். அவர் பதிலே கூறவில்லை. மௌனமாக இருந்தார். உங்கள் பெற்றோர்,
சகோதரிகளுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டேன். அப்போதும் உங்கள்
மகள், என்னை மன்னித்து விட்டுவிடச்சொல்லுங்கள் என்று கெஞ்சியது என்
உள்ளத்தை உருக்கி விட்டது"
என்றெல்லாம் எழுதியிருக்கிறார். எப்படியோ அந்த ரிசானா என்ற இளம்பெண் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.
இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள்!
அதனால்தான் மரண தண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டுமென்று நான் கூறி
வருகிறேன். அந்த நான்கு மாதக் குழந்தையைக் கொல்வதற்கு தனக்கு எந்தவிதமான
காரணமும் இல்லை என்று அந்த இளம்பெண் கூறிய வாதத்தை ஏற்க யாருமே முன்
வரவில்லை. சவுதி அரேபியாவில் உள்ள ஊட கங்களும், பொது மக்களும் கூட ரிசானா
மன்னிக்கப்பட வேண்டும் என்றே விரும்பி னார்கள். அந்த நாட்டின் இளவரசர்
பெரும் தொகையை இழப்பீடாக அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு வழங்க முன்வந்த
போதும், அவர்கள் அந்த இளம் பெண் ரிசானாவை மன்னிக்க மறுத்து விட்டார்கள்.
வீட்டு வேலை செய்வதற்காக ஒரு ரிசானா அல்ல, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட
வெளிநாட்டுப்பெண்கள் சவுதியிலே அந்தப்பணியிலே உள்ளார்கள்.
எப்படியோ அந்த 17 வயது இளம் பெண் ரிசானா
நபீக் தன் துன்பத்திலிருந்து விடுபட்டு விடுதலையாகிவிட்டாள். அவளைப்பெற்று,
வளர்க்க வாய்ப்பில்லாமல், அனுப்பி வைத்த அந்தப் பெண்ணின் பெற்றோர்
வேதனையையும் மற்றும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால் போக்கிட முடியும்?
எப்போதும் போல குழந்தைக்கு பால் கொடுத்ததைத்தவிர அவர் செய்த குற்றம் என்ன?
இன்றைக்குக் கூட பத்திரிகையிலே ஒரு
செய்தி! சென்னை, வண்ணாரப்பேட்டையில் ஸ்டீல் பட்டறை தொழிலாளி கோபு. அவருடைய
மனைவி தேன்மொழி. 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தைக்கு மோகனா
என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு
விட்டு, குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்து உறங்கிக்
கொண்டிருக்கிறார்கள். அதிகாலை 3 மணி அளவில் குழந்தை திடீரென அழுதது. கண்
விழித்த தாய், பசியில் குழந்தை அழுவதை உணர்ந்து தாய்ப்பால் கொடுத்தார்.
குழந்தை அழுகையை நிறுத்தியது. சில நிமிடங்களில் தாயும் கண்ணயர்ந்து
தூங்கிவிட்டார். காலை 6 மணியளவில் தாய் கண் விழித்து, குழந்தையைத் தூக்கிய
போது, குழந்தை பேச்சு மூச்சின்றி இறந்திருப்பதைக்கண்டு கதறுகிறாள். பால்
குடிக்கும்போது, பால் புரையேறி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால்
இறந்திருக்கலாம் என்று அந்தச் செய்தியிலே கூறப்பட்டுள்ளது.
ரிசானா பால் கொடுத்த அந்த நான்கு மாதக்
குழந்தைக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? மரண தண்டனை என்ற
ஒரு கொடுமை ஒழிக்கப்பட்டிருந்தால் ரிசானா குரூரமாகக் கொல்லப்பட்டிருக்க
மாட்டாள் அல்லவா? இதற்கு எப்போது விடியல்? உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி
இதுபோன்ற கொடுமைகள் இனியும் நேராமல் இருக்க, மானுடம் காத்திடும் மனித நேய
உணர்வோடு, மனித நாகரிக மாண்பினை வெளிப்படுத்தும் வகையில், முடிவெடுத்து
அதனை நடைமுறைக்குக் கொண்டு வர மாட்டார்களா?'' என்று தெரிவித்துள்ளார்.
Tags
உலகச் செய்திகள்