முஸ்லிம்களும் கமலும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் : ரஜினிகாந்த்!


முஸ்லிம்களுக்கு மீலாதுந் நபி வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினி காந்த், விஸ்வரூபம் பிரச்சனையில் முஸ்லிம்களும் கமல் தரப்பினரும் அமர்ந்து பேசி இவ்விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படப் பிரச்னைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

கமல்ஹாசன் எனது 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத்திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், கமல்ஹாசன் இந்தப் படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும் போது என் மனம் கலங்குகிறது.

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்குக் காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்தப் படத்தை முழுதாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துகளுடன் இஸ்லாமிய சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post