பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தின் குவட்டா நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
சனநெரிசல் மிக்க சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 63 பேர் பலியாகியுள்ளதுடன், 180 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஐந்து வாரங்களுக்குள் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது.
குவட்டா நகரிலுள்ள விளையாட்டு கழகத்தில் கடந்த மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதுடன், 121 பேர் காயமடைந்திருந்தனர்
இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ ஹங்வி என்ற தடைசெய்யப்பட்ட ஆயுதக் குழு உரிமை கோரியிருந்ததுடன், தற்போதைய தாக்குதலுக்கு இந்த குழுவே உரிமைகோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சியா பிரிவு சமூகத்தினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பிரிவினைவாத தாக்குதல் இதுவென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
Tags
உலகச் செய்திகள்
