ஹலால் சம்பந்தமான பதற்ற நிலை தொடர்பில் தெளிவுபடுத்தும் மாநாடு நேற்று(17) மஃரிப் தொழுகையை தொடர்ந்து தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஜய்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி, அதன் செயலாளர் முபாராக் மௌலவி, ஜாமியா நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம் மாநாட்டில் உடையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமாவின ஹலால் குழுவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் முர்ஷித் முலப்பர் உலமாசபையை மக்களிடமிருந்து பிரித்து இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை வளர்ப்பதுதான் பொதுபல சேனாவின் நோக்கமாகும், எனவே எந்தவொரு முஸ்லிமும் இந்த சதி வலையில் சிக்கி விடக் கூடாது என குறிப்பிட்டார்.
தொடந்து உரைநிகழ்த்திய அவர் :
பொதுபலசேனா அமைப்பு சுமார் 200 கம்பனிகளுக்கு கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து. எனினும் 15 கம்பனிகளே அக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தன. அதில் ஹலால் சான்றிதழை இரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும் இரண்டு கம்பனிகளே ஹலால் சான்றிதழை இரத்து செய்ய ஒத்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆயினும் ஒரு கம்பனி மாத்திரமே ஹலால் சான்றிதழை தாம் தவிர்த்துக் கொள்ளப் போவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆகவே குறுந்தகவல் மூலம், சில கம்பனிகள் ஹலால் சான்றிதழை இரத்துச் செய்துவிட்டதாக வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை.
அதே நேரம் முக்கியமான ஏற்றுமதி நிறுவனங்கள் முப்பத்தைந்தை கூட்டி அரச தரப்பில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது. அப்போது அந்நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் தவிர்ப்பை மறுத்தன. அச்சான்றிதழை தவிர்த்துக் கொள்வதனால் தமது தயாரிப்புகளின் விற்பனை குறைந்துவிடும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழுக்கு சிறிய தொகையையே எம்மிடம் அறவிடுகிறது. எனினும் பொதுபல சேனா அமைப்பு இச்சான்றிதழை தவிர்க்குமாறு தொடர்ந்தும் அழுத்தம் தருவதாக அத்தரப்பினர் தெரிவித்தனர்.
அதே நேரம் ஹலால் விண்ணப்பப் படிவம் நான்காயிரம் ரூபா பெற்றுக் கொண்டே விநியோகிக்கப்படுவதாக பொதுபலசேனா அமைப்பு கூறிவருகின்றது . உண்மையில் விண்ணப்பப் படிவம் இலவசமாகவே விநியோகிக்கப்படுகிறது. எனினும் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும்போதுதான் நான்காயிரம் ரூபா அறவிடப்படுகிறது. குறித்த நிறுவனம் பற்றியே மீளாய்வுக்காகவே அத்தொகை பெறப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
