புத்தளம் பள்ளிவாசலில் நினைவு கூறப்பட்ட காதலர் தினம்

(ஹிஷாம் ஹுஸைன், புத்தளம்)
“வெற்றிகரமான ஸ்திரமான மண வாழ்வொன்றை உருவாக்க உணர்ச்சிகரமான உந்துதலோ, உள உணர்வுகளோ போதாது. இத்தகைய திருமணம் சமநிலையையும் ஸ்திரத்தையும் இழந்துவிடும். அது கற்பனா உலகில் சஞ்சாரம் செய்யும். நடைமுறை வாழ்வோடு மோதல் ஏற்படுகின்ற போது இரு பாலாரும் அவசரப்பட்டதை உணர்வதோடு, தலாக் என்ற வெறுப்புக்குரிய ஹலால் நிகழலாம்”  பேராசிரியர் அப்துல் பாரி 


புத்தளம் மஸ்ஜிதுல் பகாஹ் (வெட்டுக்குளம் பள்ளி)யில் கடந்த 13-02-2013 ஆம் திகதி இஷா தொழுகையின் பின் வெலன்டைன் தினம் அல்லது காதலர் தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று பீஸ் கிளப் (Peace Club) இனால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இதன் போது அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) காதலர் தினம் தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறப்புரையாற்றினார். 

மேற்படி காதலர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாஸிக் ஸலாம் ஓதிய புனித கிராஅத்துடன் ஆரம்பமானது. பீஸ் கிளப் பற்றிய அறிமுகத்தையும் காதலர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நோக்கத்தையும் ஏ.டி.எம். அஹ்ஸன் வழங்கினார்.

‘இஸ்லாம் இளைஞர்களின் பார்வையில்’ என்ற தலைப்பில் எதிர்பால் ஈர்ப்புக்கான தூண்டற்காரணிகளையும் அதன் விளைவாக உருவாகும் பண்பாட்டுச் சீரழிவுகளையும் தடுப்பதற்கு இஸ்லாம் கற்றுத்தந்துள்ள ஒழுங்கு முறைகளை புகைப்படங்களுக்குப் பொருத்தமான புனித குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களுடனும் பவர்பொயின்டில் காட்சிப்படுத்திய விதம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. இக் காட்சிப்படுத்தலை எஸ். பாலில் விளக்கினார்.

உரிய நேரத்திற்கு தொழுகையும் இல்லாமல் ​பொறுப்பின்றி காலத்தை கழிக்கும் இளைஞர்கள் நால்வரின் கோர மரணத்தைக் கூறும் குருந்திரைப்படம் காட்டப்பட்டது. அது வாலிபர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் படிப்பினையூட்டியது. 

பீஸ் கிளப்பின் தலைவர் எஸ்.எச்.எம். இஸ்ஜத் (2010 – 2011 சிரேஷ்ட மாணவர் தலைவர் – சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்) அதன் தோற்ற வரலாற்றைக் கூறும் போது: “எங்கள் ஊரின் மூத்த சகோதரர்கள் குழுக்கள் அமைத்து சமூகப் பணிகளில் ஈடுபடுவதைக் கண்டு ஆர்வப்பட்டோம். தற்போது எமது குழுவில் 46 பேர் இருக்கின்றோம். இதுவரை சிரமதான நிகழ்ச்சியொன்றிலும் சிலாபம் நகருக்கான வெள்ள நிவாரணப் பொருள் சேகரிப்பு விநியோக பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் க.பொ.த. சா/தரம், உ/தரம் கல்விக் கருத்தரங்குகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வைத்திய முகாம் போன்றவற்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் சமூக நலப் பணிகளை புத்தளம் பெரியபள்ளிவாசலின் தலைமைமையின் கீழ் செயல்படுத்துவதை விரும்புகின்றோம். எவ்வித அரசியல் சார்பும் இன்றி சுதந்திரமாக செயல்படுவோம்” என்றும் கூறினார். பீஸ் கிளப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் 2011 ஆம் ஆண்டளவில் க.பொ.த. உ/தரம் எழுதிய முன்னிளமைப் பருவத்தினர் என்பது சிறப்புக்குரியது.

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தனதுரையில் வெலன்டைன் தினம் என்பது பண்டைய உரோம கிரிஸ்தவ சமய சார்பான விழா என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைத்தார். இன்றைய காலத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறும் விடயங்கள் இஸ்லாத்தில் வெளிச்சத்தில் முற்றிலும் மறுக்கப்பட்டவை என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களுடன் எடுத்துரைத்தார். மேலும் சர்வதேச அங்கீகாரமுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வு  மையங்களினால் வெளியிடப்பட்ட சமூகவியல், உளவியல் ஆய்வறிக்கைகளுடன் மருத்துவத்துறை ஆய்வு முடிவுகளையும் புள்ளி விவரங்களுடன் முன்வைத்து ‘காதல் என்பது ஒரு மனநோய்’ என்பதை நிறுவிய விதம் சன்மார்க்க சொற்பொழிவு மரபில் புதிய திசைகாட்டி எனலாம்.

1 Comments

  1. புத்தளம் நகரில் முதல் முறையாக நடத்தப்பட்ட இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் செய்தியை வெளியிட்டமைக்கு ஜஸாகல்லாஹு ஹைரன்.
    உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன். ஆமீன்!!

    ReplyDelete
Previous Post Next Post