பிறந்த உடனேயே குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் அக்குழந்தையின் தாய், தந்தை உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் சவிவபுர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கொலை தொடர்பாக குழந்தையின் தாய், தந்தை, குழந்தையின் பாட்டி மற்றும் அவர்களது அயலவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக இரத்தப்பெருக்கு காரணமாக குழந்தையின் தாய் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைக்காக செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்துள்ளதாக இந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
வெளிநாடொன்றிற்கு வேலைக்கு செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் குழந்தை இருக்கும் பட்சத்தில் வெளிநாடு செல்ல முடியாதெனக் கூறி குழந்தையைப் பிறந்த உடனேயே கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதன்காரணமாக பிறந்த குழந்தையை துவாய் ஒன்றினால் சுற்றி வீட்டிற்கு அருகிலுள்ள மலசலக்குழிக்குள் போட்டுள்ளனர். வீட்டு வளவை சோதனையிட்ட பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
தற்போது இந்தப் பெண் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
