ஹலால் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமனாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும் சிங்கள வர்த்தகர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது ஹலால் சான்றிதழை வாபஸ் பெறக்கூடாது எனவும் ஹலால் சான்றிதழானது வர்த்தகத்தை பொருத்தவரை மிகவும் அவசியமானது எனவும் சிங்கள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஹலால் சான்றிதழ் தொடர்பில் சிலர் மேற்கொண்டுவரும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் எமது வர்த்தகத்தை வெகுவாக பாதித்துள்ளது. அத்துடன் ஏற்றுமதியையும் தற்போது பாதித்து வருகிறது. இப்படியே தொடர்ந்தால நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினை ஏற்படும். எது எவ்வாறு இருப்பினும் ஹலால் முறைப்படியே எங்கள் உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உற்பத்திக்கு பிறகு வேண்டுமென்றால் ஒரு தொகை பொருட்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் முத்திரை பொறிக்காது விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம். என தெரிவித்துள்ளனர்.
குறித்த அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அமைச்சர்களான ரிஷாத் பதியுத்தீன், ரவூப் ஹகீம், அதாவுல்லாஹ் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம். பெளசி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
