
(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)
அண்மைக்காலமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகம்
கொடுப்பதில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும்
இன்றுவரை முஸ்லிம்களின் சிவில் அரசியல் மற்றும் சன்மார்கத் தலைமைகள்
ஒன்றிணைந்து ஒரு பொதுவான ஷூரா முறையை அமைத்து அதனை உயர் மட்டத்திலிருந்து
அடிமட்டம் வரை கொண்டு செல்லும் முயற்சிகளை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக
தெரியவில்லை.
ஹலால் சான்றிதழ் விவகாரம் சூடுபிடித்த கையேடு அகில இலங்கை ஜம்மியத்துல்
உலமா பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாடு தழுவிய ரீதியில் எடுத்து
வந்துள்ளது, அதேபோல் இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் எனும் அமைப்பும் சில
நகர்வுகளை எடுத்து வந்துள்ளமை மறுக்க முடியாத உண்மைகளாகும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மார்க்க அறிஞர்களுக்கான ஒரு சேம நல சேவை
அமைப்பு என்பதனாலும் குறிப்பாக ஒரு இஸ்லாமிய இயக்கமும் அதன பிரபலங்களும்
மாத்திரம் அதில் கூடுதலாக செல்வாக்கு செலுத்துவதாலும் ஏனைய இஸ்லாமிய
இயக்கங்கள் ,தொண்டர் நிறுவனங்கள், தொழில் சார் நிபுணர்கள், தேசிய மட்ட
அமைப்புக்கள் தங்களுக்கு சரி சமமான கௌரவமும் பிரதிநிதித் துவமும் அங்கு
கிடைப்பதில்லை மாறாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஒரு சில தலைமைப்
புள்ளிகளின் முடிவுகளுக்கு அல்லது அரசியலுக்கு தாம் கட்டுப் பட
வேண்டியுள்ளது என குறை கூறுகின்றனர்.
அதேவேளை இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கடந்த சிலவருடங்களுக்கு முன் பல
அமைப்புக்களின் பங்கு பற்றுதலுடன் ஆரம்பிக்கப் பட்டாலும் அதற்கான வருடா
வடுட பொதுக்கூட்டங்கள் பட்டு தலைமைத்துவக் ஒரு செயலகத்துடனும் அது
முறையாக இயங்காததால் இன்று ஒரு சில பிரபலங்கள் மாத்திரம் அதனை
கையாளுகின்றமை அதன் மேலுள்ள நம்பிக்கையினை குறைத்துள்ளது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைமைகள் எல்லோரும் அறிந்ததே, அதனை
ஆராய்வதில் எமது நல்லெண்ண முயற்சிகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக
இப்போதைக்கு அதனை தவிர்த்துக் கொள்வோம்.
இது வரை இந்த அமைப்புக்கள் தனித்தும் இணைந்தும் மேற்கொண்ட நடவடிக்கைகளை
நன்றியுடன் நினைவுகூருவதோடு நாளுக்கு நாலா அதிகரித்து வரும் சவால்களையும்
அவற்றின் அரசியல் இராஜ தந்திர பின்புலன்களையும் கருத்தில் கொண்டு அகில
இலங்கை ஜம்மியத்துல் உலமா ,முஸ்லிம் கவுன்ஸில் உற்பட ஏனைய இஸ்லாமிய
அமைப்புக்கள் , வை எம் எம் ஏ , முஸ்லிம் லீக் போன்ற பழமை வாய்ந்த தேசிய
அமைப்புக்கள் ,முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இளைஞர் மாதர்
அமைப்பின் பிரதிநிதிகள் , கல்விமான்கள் ,புத்திஜீவிகள், தொழில் அதிபர்கள்,
வர்த்தக சமூகத்தினர் என சகலரையும் சமமாக வழிநடாத்தக் கூடிய ஒரு
ஒருங்கிணைப்பு பொறிமுறையை நாம் தேசிய ஷூராவாகவும் அதே ஒருமைப்பாட்டுடன்
அடிமட்ட ஷூராக்களையும் அமைத்துக் கொள்வதே இன்றைய தேவையாக சகலராலும்
உணரப்படுகிறது.
தனிநபர்கள் செல்வாக்குச் செலுத்துகின்ற அமைப்புக்கள், கட்சிகள் அல்லது
தொண்டர் நிறுவனங்கள் மிகவும் இலகுவாக அச்சுறுத்தப் படலாம் இலாகவமாக கையாளப்
படலாம் என்பதற்கு எல்லோரும் தனித்தனியாகவே ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்...
நிகழ்வுகள் போதுமான எடுத்துக் காட்டுகளாகும்.
அல்குரானிலும் சுன்னஹ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் சவால்விடுவோரை அல்லது போர்ப்பிரகடனம் செய்வோரை
எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள் கட்டளைகள் வசனங்கள் அத்தாட்சிகள் நிறையவே
இருக்கின்றன. மக்க வாழ்வு, ஹிஜ்ரத,மதீனா வாழ்வு, ஹுதைபிய உடன்பாடு,
மோதல்கள், மக்க வெற்றி மீண்டும் மதீனா வாழ்வு என அவ்வக் கால
சூழ்நிலைகளுக்கு பொருத்தமான வழிகாட்டல்கள் ரசூலுல்லாஹ்வுக்கு
வழங்கப்பட்டன.
அன்று அல்லாஹ்வுடைய வஹியும் கட்டளைகளும் அல்லாஹ்வின் தூதருடைய பிரசன்னமும்,
வழிகாட்டல்களும் நேரடியாக சஹாபாக்களுக்கு கிடைத்தது, இன்று குறிப்பாக
முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையாக இருக்கின்ற இலங்கை போன்ற நாட்டில்
சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெரியாமல் குர்ஆனில் வரலாற்றில் சுன்னஹ்வில்
இருகின்றதென ஆதாரங்களைக் கூறி சிலர் ஆவேசமான உரைகளை நிகழ்த்துவதை அவதானிக்க
முடிகிறது.
அல்லாஹ்வின் வஹியோ தூதரோ இல்லாத பொழுது ஒன்று பட்ட முஸ்லிம்களின்
உம்மத்தின் கூட்டுத் தலைமை இஸ்லாமிய சட்டவாக்க அடிப்படைகளை சந்தர்ப்ப
சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு அறிஞர்கள் புத்திஜீவிகள் துறை சார்
நிபுணர்கள் சமூகத் தலைமைகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறை
சார்ந்தோரையும் கலந்தாலோசித்து ஷூரா மூலம் எடுக்கின்ற முடிவுகளை மாத்திரமே
முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.
அல்லாஹ்வுக்காக எந்த பிரபலங்களும் தனி நபர்களும் அல்லது இயக்கங்களும்
தத்தமது அடையாளத்தை செல்வாக்கை அல்லது நிகழ்ச்சி நிரலை அரசியலை
முன்னிலைப்படுத்தாது இவாறான ஒரு கூட்டு முயற்ச்சியை மேற்கொள்ள முன்வர
வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ் இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சி ஒன்றில்
பலதர்ப்புக்களையும் கொண்ட பிரதிநிதிகள் இறங்கியுள்ளார்கள் அவர்களது முயற்சி
கூடிய விரைவில் வெற்றிபெற வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்வை
பிரார்த்திப்போமாக.
தலைமைத்துவ வெற்றிடமும் அடிமட்ட ஷூரா அமைப்புகளின் அவசியமும்....!
இன்று முஸ்லிம் சமூகம் குறிப்பாக போருக்குப் பின்னரான இலங்கையில்
எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல், பாதுகாப்பு, இருப்பு மற்றும்
இன்னொரன்ன விவகாரங்களிலான சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும்
என சிந்திப்பது சமூகத்தின் சகல தரப்புகள் மீதும் காலத்தின் கட்டாயமாக
இருக்கிறது.
பொதுவாக ஏதேனுமொரு பிரச்சினை தோன்றுகிற பொழுது உடனடியாக அரசியல் வாதிகளையோ,
பிரபலங்களையோ , கொழும்பிலுள்ள ஸ்தாபனங் களையோ அணுகுவது வழமையாக
இருக்கின்றது, சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும், இயக்க ரீதியாகவும்
தமக்குள்ளே முரண் பட்டு , பிளவுண்டுள்ள முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின்மையால்
பல்வேறு துறைகளிலும் வலுவிழந்து பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்றுடன்
பெரும் நம்பிக்கையீனத்துடன் இருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே.
இன்றைய நிலையில் இந்த தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் நாம் நமது
இருப்பையும், பாதுகாப்பையும், அரசியல் சமூக பொருளாதார,கல்வி கலாச்சார,
மற்றும் இன்னொரன்ன விவகாரங்களிலான நமது உரிமைகளையும், சலுகைகளையும் உறுதி
செய்து கொள்ளுகிற வலுவுள்ள சிறு பான்மை சமூகமாக மாற முடியும்.
இங்கு தலைமைத்துவம் என்பதன் மூலம் கருதப் படுவது என்ன என்பதனை நாம்
புரிந்து கொள்ளல் வேண்டும், சிலர் இதனை எல்லோரும் உடன் படுகின்ற ஒரு தலைவர்
கண்டுபிடிக்கப் பட வேண்டும் என தவறாகப் புரிந்து கொள்வர், ஒரு தனி நபர்
தனது விவகாரங்களை சரிவர திட்டமிட்டு பொறுப்புக்களை , கடமைகளை சரிவரச்
செய்து, தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அடைவுகளை வென்று கொள்வதற்கான
பண்பியல்புகளை கொண்டிருப்பதே தலைமைத்துவப் பண்புகள் என அடையாளப் படுத்தப்
படுகிறது.
இவாறு ஒரு குடும்பம், ஒரு குழுமம், ஒரு கிராமம், ஒரு நகரம், மொத்தமாக ஒரு
சமூகம் என கூட்டுத் தலைமைத்துவப் பண்புகளை பெற்றிருக்கின்ற பொழுது அந்த
ஒவ்வொரு அலகும் தத்தமக்குரிய தெளிவான நிகழ்ச்சி நிரல்களை ,செயற்றிட்டங்களை
வகுத்து மிகவும் வெற்றிகரமாக சமூக பொருளாதார, அரசியல் வாழ்வியல்
சவால்களுக்கு முகம் கொடுக்கின்றன, தமது இருப்புக்கும், பாதுகாப்பிற்கும்,
பொருளாதாரத் திற்கும், ஆத்மா கௌரவத்திற்கும் விடுக்கப் படுகிற சவால்
களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கின்றன.
இந்த அடிப் படையில் நமது சமூகம், ஊர் மற்றும் மஹா ல்லா மட்டத்திலான சகல
தரப்புக் களையும் உள்வாங்கிய மஜ்லிஸ் அல்-ஷூராக்களை (ஆலோசனை சபைகளை )
பள்ளி வாசல் நிர்வாகங்களுக்கு புறம்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் உள்ள உலமாக்கள், படித்தவர்கள், தொழிலதிபர்கள், இளைஞர், மாதர்
பிரதி நிதிகள் ,அரசியல்,சமய இயக்கப் பிரதி நிதிகள் என சகல தரப் புகளையும்
கொண்ட நிரந்தரமான ஆலோசன சபைகளை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொரு
சந்தர்ப் பத்திலும் மிகச் சரியாக , ஆழமாக ஆராயப் பட்ட தீர்வுகளை,
வழிகாட்டல்களை மொத்தத்தில் தலைமைத் துவத்தை ஒவ்வொரு கிராமும் அவ்வப்போது
பெற்றுக்கொள்ளும்.
முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் இது புதிய ஒரு தலைமைத்துவ கட்டமைப்பு
அல்ல, மாறாக மஸ்ஜித்களை மையமாகக் கொண்ட சமூக கூட்டு வாழ்வை , கூட்டுக்
கடமைகளை , மிம்பர் எனும் வழிகாட்டும் அரியாசனத்தை, வார வார வெள்ளி
பிரசங்கங்களை , ஷூரா முறையினை , இமாம், மாமூம், அமீர், மாமூர் கட்டுக்
கோப்புகளை இஸ்லாம் அல்குரான் .அல்-ஸுன்னா மூலம் மிகத்தெளிவாக அடையாள
படுத்தியுள்ளது. அவற்றை அடிப்படியாக கொண்டு வாழ்ந்த நபித் தோழர்கள்,
முன்னோர்கள் என ஒரு அழகிய வரலாற்றுப் பாரம் பரியமும் எமக்கு இருக்கிறது.
இவ்வாறு அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரையிலான முஸ்லிம் சமூகத்தின்
சகல தரப்பினரையும் உள்வாங்கிய ஷூரா அமைப்பு முறை இலங்கை வால் முஸ்லிம்
சமூகத்திற்கு மிகவும் சிறந்த தலைமைத்துவக் கட்டமைப்பாக வருவதோடு முஸ்லிம்
சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவ்வப்போது மிகவும் வெற்றிகரமாக முகம்
கொடுப்பதற்கான மூலோபாயங்களையும் கொண்டிருக்கும்.
முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் குறுகிய நீண்ட மற்றும் இடைக்கால
நிகழ்ச்சி நிரல்களை இந்த தலைமைத்துவம் வகுத்துக் கொள்ளும். தனி நபர்களையோ
தனி நபர்களை மாத்திரம் நம்பியுள்ள அரசியல் கட்சிகளையோ இயக்கங்களையோ அல்லது
தங்களுக்குள் கொள்கையிலும் அணுகுமுறைகளிலும் வேறு பட்டிருக்கும்
இயக்கங்களையோ மாத்திரம் நம்பியிராது அந்த சகல் தரப்புக்களையும்
அரவணைத்துச் செல்கின்ற தேசிய ஷூரா ஒன்றின் அவசியம் இன்று வெகுவாக
உணரப்பட்டுள்ளது.
இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் இந்த நாட்டு முஸ்லிம்களை
அல்லது சகோதர சமூகங்களை மாத்திரம் மையப்படுத்தியவை அல்ல. முஸ்லிம்
சமூகத்திற்கு முடுக்கி விடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரங்களுக்குப்
பின்னால் சர்வதேச முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான யூத சியோனிச மேலைத்தேய
பிராந்திய மேலாதிக்க சக்திகளும் தொழிற்படுகின்றன,கேந்திர
முக்கியத்துவமிக்க பாரிய அரசியல் இராஜதந்திர மூலோபாயத் திட்டமிடல்களும்
உளவுச் சக்திகளும் கூலிப்படைகளும் இருக்கின்றன.
இவ்வாறான பல்வேறு பல்வேறு பரிமானாங்களிலும் மிகவும் நெருக்கடியான ஒரு
காலகட்டத்தில் எமது குறுகிய சமூகத்தை மாத்திரம் மைய்யப்படுத்திய அரசியல்,
தனி நபர், இயக்க ,ஸ்தாபன நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் தேசிய நலன்களை
,சமாதான சகவாழ்வை விரும்புகின்ற சகல சக்திகளோடும் புரிந்துணர்வோடு
சமயோசிதமாகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் விவேகமாகவும் கைகோர்த்து
செயற்பட வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.
இத்தகைய தலைமைத்துவக் கட்டமைப்புகள், நமது சிவில் மற்றும் அரசியல், இயக்க
தலைமைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படவேண்டிய நிகழ்ச்சி நிரல் களை, வேலை
திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு, அவர்களது சேவைக் காலத்தையும்,
தராதரத்தையும், மதிப்பீடு செய்து நிர்ணயிக்கின்ற தகுதியையும் வல்லமையையும்
பெற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேக மில்லை.
இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய
அவசியம் கிடையாது...அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை
வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த
மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக்
கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மிகவும் சமயோசிதமான
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இஸ்லாமிய அமைப்புகள், பல் கலைக் கழக
முஸ்லிம் மாணவர் மஜ்லிஸ் கள், இளைஞர் அமைப்புகள், பள்ளிவாசல் நிர்வாகங்கள்,
குறிப்பாக முஸ்லிம் ஊடகங்கள் ,உலமாக்கள் புத்தி ஜீவிகள் அடிமட்ட மஜ்லிஸ்
அல்-ஷூராக்களை கிராமங்கள், நகரங்கள் தோறும் தோற்றுவிப்பதற்கான
முன்னெடுப்பை தம்மீது சுமத்தப் பட்டுள்ள மிகப் பெரிய சமூக சமயக் கடமையாக
கருதி அறிமுகப் படுத்தி மேற்கொள்ளுமாறு மிகவும் பணிவாக வேண்டிக்
கொள்கின்றேன்.
Tags
கட்டுரைகள்