இலவச விளம்பரம் - திரைத்துறையினரின் புதிய திட்டம் ?

'ஆண்டவ பெருமாள்' என்ற படத்தின் தலைப்பு இந்துக்களைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகச் சொல்லி தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் செந்தில், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

"வருங்காலங்களில் இந்துக்கடவுள்களின் பெயர்களை திரைப்படங்களுக்கு வைத்தால், இந்து அமைப்புகளைக்கூட்டி போராட்டம் நடத்தப்படும்" என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய மதஉணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் தடை கோரினர். தமிழக அரசு தலையிட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழகத்தில் நேற்று திரையிடப்பட்டது. திரையுலக வரலாற்றிலேயே திரைப்படத்திற்குத் தடைகோரும் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது விஸ்வரூபம் படத்திற்கு என்றால் மிகையில்லை. இதனால் உலகெங்கும் இந்த திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்தது. அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தையும் தடைசெய்யும்படி சிலர் கோரியதால் இந்தப்படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைத்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'கடல்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. விஸ்வரூபத்திற்கு தடைகோரியதுபோல் கடல் படத்திற்கும் தடை கோரினால் படம் ஓடும் என்று நினைத்தார்களோ என்னவோ, தற்போது கடல் திரைப்படத்திற்கு தமிழக மீனவர் கூட்டமைப்பு தடைகோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோடிகோடியாக செலவளித்து மீடியாக்களில் விளம்பரம் செய்வதைவிட சர்ச்சைக்குரிய காட்சியோ அல்லது படத்தின் பெயரோ இருக்கும்படி செய்துவிட்டால் சல்லிக்காசு செலவின்றி இலவச விளம்பரம் கிடைத்து விடுகிறது. இதன்மூலம் ஓடாத படங்களைக்கூட பரபரப்பை உருவாக்கி ஓடவைத்துவிடலாமென்ற எண்ணம் திரைத்துறையினரிடம் எழுந்துள்ளதாகவே தெரிகிறது.

Post a Comment

Previous Post Next Post