ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மான
விடயத்தில், கடந்தமுறை போன்றே இந்தியா இம்முறையும் செயற்படும் என்று
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக,
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்
தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று தமிழ்நாட்டைச் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச்
சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடி உள்ளது.
போரின் போது மனித
உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு
வரவுள்ள தீர்மானத்தை மேற்கு நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் ஆதரிக்க
வேண்டும் என்று, இந்தக் குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம்
வலியுறுத்தினர்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதன்
மூலம், தமிழர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும், குறிப்பிட்டுள்ள
அவர்கள், வடக்கு மாகாணத்தில் நீதியான தேர்தலை நடத்தவும், இடம்பெயர்ந்த
மக்களின் மீள்குடியமர்வு, புனர்வாழ்வுக்கும் இலங்கைக்கு இந்தியா அழுத்தம்
கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பை
முடித்து வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்,
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மான விடயத்தில் இந்தியா கடந்தமுறை எந்த
நிலைப்பாட்டை எடுத்ததோ அதே நிலைப்பாட்டையே இம்முறையும் கடைப்பிடிக்கும்
என்று உறுதியளித்ததாக தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
எஸ்.வி.சித்தன், எம்.கிருஸ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, ஜே.எம்.ஹரூன்,
எஸ்.எஸ்.ராமசுப்பு, பி.விஸ்வநாதன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து
கொண்டனர்