ஹலால்
முத்திரை குத்தப்பட்ட பொருட்கள் , ஹலால் முத்திரை பொறிக்கப்படாத பொருட்கள்
என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை
எடுத்துள்ள தீர்மானமானது ஹலால் சான்றிதழ் தொடர்பான செயற்பாட்டு விதிகளுக்கே
முரணானதாகும் என்று அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல
உறுமய தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஹலால் சான்றிதழ் தொடர்பான வழிகாட்டி கையேட்டில் ஹலால் உற்பத்திப் பொருட்களோடு இணைந்ததாக ஹலால் அற்ற பொருட்கள் தயாரிக்கப்பட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் முஸ்லிம்களுக்கு வேறாகவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறாகவும் பொருட்களை தயாரிக்குமாறு கோருவது நடைமுறைக்கு எந்தவகையிலும் ஒத்துவராது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் இவ்வாறான வேறுபாடுகளை தோற்றுவிப்பதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை என்பதுடன் ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்கள் ஹலால் முத்திரை பொறிக்கப்படாத பொருட்கள் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும் என்றும் சுட்டிக்காட்டிய அவர் ஹலால் பொருட்கள் ஒரு நிறுவனத்தில் தயாரிக்கப்படுமாயின் அதே நிறுவனத்தில் ஹலால் அல்லாத பொருட்களை தயாரிக்க வேண்டுமாயின் இரண்டு நிறங்களில் தயாரிக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டியிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.