(LM) இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி நடவடிக்கைகளின் பின்னணியில் சில அரசியல் சக்திகளின் அழுத்தங்கள் இருப்பதை நன்றாக அறிவேன். எந்தவொரு தருணத்திலும் முஸ்லிம் சமூகத்தினை கைவிடமாட்டேனென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாலை மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு ஜனாதிபதியை வலியுறுதியுள்ளது .
இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில் ; நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் சதிகள் குறித்து நான் நன்கு அறிந்துள்ளேன். சில மத அமைப்புகள் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவினை சிதைப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இவ்வாறான சதி நடவடிக்கையில் ஈடுபடும் இம்மத அமைப்பின் பின்னணியில் சில அரசியல் சக்திகள் செயற்பட்டுவருவதையும் நன்றாக அறிவேன். முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதி நடவடிக்கைகளை ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் அவ்வமைப்புகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க நான் முன்வருவேன்.
கடந்த வருடம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் முஸ்லிம் அமைப்புகள் இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்துள்ளன. குறிப்பாக அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா சபை இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு செய்த உதவியை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம். நன்றியுடனேயே நாம் செயற்படுவோம். எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் மத நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான அனைத்து வழிவகைகளையும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் அமைச்சர்களுமான பஷில் ராஜபக்ஷ, பௌசி, நிமல் சிறிபால டி சில்வா, பைஸர் முஸ்தபா உட்பட சில முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
