ஜம்இய்யதுல் உலமா பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தன.- அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி


வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் என்ற தீர்மானத்தின் ஊடாக ஹலாலை விட்டுக்கொடுக்கவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.


முன்னர் ஹலால் சான்றிதழ் கட்டாயம் பொறிக்கப்பட வேண்டும் என இருந்தது. எனினும் தற்போது அவ்வாறில்லை. விரும்பினால் மாத்திரம் ஹலால் சான்றிதழை பெற முடியும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

"இதன் மூலம் ஹலால் விடயம் விட்டுக்கொடுக்கப்படவில்லை. ஹலால் விடயம் பாரியதொரு பிரச்சினையாக என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு காணப்படவில்லை. எனினும் சமூகங்களுக்கு மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்பட்டது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹலால் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை வெளியாகுதற்கு முன்னர் இந்த தீர்மானம் மேற்கொண்டமைக்கான காரணம் என்னவென ஊடகவியலாளரொருவர் வினவியதற்கு 

"இந்த பிரச்சினை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தன. இந்த அழுத்தங்களை கருத்திற்கொண்டு அவசரமான முடிவொன்றை எடுக்க நேரிட்டது. இதனாலேயே அவசரமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த அமைச்சரவை உப குழுவில் ஹலால் தொடர்பில் மாத்திரம் அறிக்கை சமர்ப்பிக்காது. அது ஹலால் உட்பட சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளது. இதனால் இந்த குழுவிடம் எமது ஹலால் தொடர்பான தீர்மானமும் சமர்ப்பிக்கப்படும்" என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

ஹலால் தொடர்பிலான அறிவிப்பினை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அனுசரனையில் சம்மேள தலைவர் சுசந்த ரத்னாயக்க தமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பெல்லன்வில விமலரத்ன தேரர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி உட்பட பல சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சிரேஷ்ட பௌத்த மதகுருவான சீவலி தேரர் மிக சரளமாக தமிழ் மொழியில் ஹலால் தொடர்பான அறிவிப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி,

"இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை இலங்கைக்காக மாத்திரம் வழங்கவில்லை. சுமார் 65க்கு மேற்பட்ட நாடுகளுக்காகவே நாங்கள் வழங்குகின்றோம்.  தற்போது நாட்டில் காணப்படும் ஒற்றைமை ,மனிதநேயம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு பங்களிப்பு செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம்.இதன் அடிப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகும்.

இங்கு கருத்து தெரிவித்த பெல்லன்வில விமலரத்ன தேரர்,
"ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு கிடைக்கப்பெற்ற இந்தத் தீர்மாமானது முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும். பொது பல சேனவின் அபிப்பிராயங்கள் முழு பௌத்த தேரர்களின் அபிப்பிரயமுமல்ல. அனைத்து சமுகங்களிலும் அதீதிதீவிரவாதம் மற்றும் அடிப்படை வாதம் கொண்டவர்கள் காணப்படுவர்.

அதுபோன்றே இந்த பொது பல சேன அமைப்பினருமாகும். இதனால் இவர்கள் விடயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அத்துடன் இந்த தீர்மானத்தினால் யாரும் வெற்றியடையவுமில்லை தோல்வியடையவுமில்லை. இது முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இது ஒரு பௌத்த நாடு. எனினும் ஏனைய மதங்களையும் நாங்கள் மதிக்கின்றோம். அதேபோன்று ஏனைய மதத்தவர்களும் பௌத்தர்களை மதிக்க வேண்டும். ஹலால் முஸ்லிம்களின் உரிமையாகும். நாம் அதனை மதிக்கிறோம். அதேநேரம், இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நாம் ஏன் ஹலால் உண்ண வேண்டும் எனக் கேட்கிறார்கள்.
ஹலால் தொடர்பில் போதிய விளக்கம் எமக்கு வழங்கப்படவில்லை. 

இந்த விவகாரம் தொடர்பில் நாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் பல தடவைகள் பேச்சு நடத்தினோம். உலமா சபையினர் எமது நண்பர்கள். நாம் தொடர்ந்தும் சிநேகபூர்வமான முறையில் விடயங்களைக் கையாளுவோம். இந்த தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு பின்னணி நிகழ்ச்சி நிரலிற்போ காரணங்களோ அல்லது எந்தவித அழுத்தங்களோ பிரயோகிக்கப்படவில்லை" என்றார்.

நன்றி: தமிழ் மிரர் 

Post a Comment

Previous Post Next Post