பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பெளத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் நாளை முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் அவர் வற்புறுத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த பாடசாலையின் அதிபராக பெளத்த தேரர் ஒருவரே கடமையாற்றுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பெற்றோரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமையா இன்று இஷா தொழுகையை தொடர்ந்து எழுவில ஜும்ஆ பள்ளிவாசலில் விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது நாளைய தினம் அவதானித்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமென எழுவில ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் முஹம்மத் பாரில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த பாடசாலையின் அதிபர் முஸ்லிம் மாணவர்களும் ஏனைய சிங்கள மாணவர்களைப்போல் அம்மா, அப்பா மற்றும் ஆசிரியர்களை காலில் விழுந்து வணங்க வேண்டும். இல்லையேல் பிரம்படி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
சுமார் 30 முஸ்லிம் மாணவர்கள் வரையில் கல்வி பயிலும் குறித்த பாடசாலையின் அதிபரின் கட்டளை குறித்து நாம் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் அந்தகேயின் கவனத்துக்கு கொண்டுவந்தோம். அவர் உடனடியாக அதிபரை தொடர்பு கொண்டு இது குறித்து வினவினார். அப்போது தாம் முஸ்லிம் மாணவர்களிடம் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாளைய தினம் மாணவர்கள் பாடசாலைக்கு வழமை போன்று செல்வர். நாளையதினம் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நாம் சிந்திப்போம் என அவர் தெரிவித்தார்.
தகவல் - விடிவெள்ளி
