துருக்கியில் கைதாகிய பின்லேடன் மருமகன் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு! - Video



அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் மருமகன் (Sulaiman Abu Ghaith) சுலைமான் அபு ஹைத், துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, நியூயார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஹைத் மீது தீவிரவாத புகார் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அமெரிக்க சிறையில் அவர் அடைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்லேடனின் மகள் பாத்திமாவை மணந்துள்ளார் ஹைத். இவர் மீது அமெரிக்கர்களை கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு துருக்கியில் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் தான் ஹைத் கைதானார்.

முன்பு இவர் அல் கொய்தாவின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இருப்பினும் இவருக்கு அல் கொய்தா அமைப்பில் தீவிர செயல்பாடுகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதேபோல 2001ல் செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் சதித் திட்டத்திலும் இவருக்குப் பங்கில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.


 

மேலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரிய அளவிலான சதியில் இவர் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. ஆனால் அமெரிக்கர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக அவர் மீது பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 47 வயதாகும் ஹைத், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினராக கருதப்படுகிறார். மேலும் அமெரிக்க கோர்ட்டில், அல் கொய்தாவைச் சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளி விசாரிக்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post